மதுரை மத்திய சிறை வளாகத்தில் உள்ள பழங்களை சிறைக் கைதிகள் கற்களைக் கொண்டு எறிந்தனர். இந்த கற்கள் சாலையில் சென்றவர்கள் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
தென் மாவட்டங்களில் மிக முக்கிய சிறையாக விளங்கக்கூடியது மதுரை மத்திய சிறை. இச்சிறை வளாகத்தினுள் ஆண்கள், பெண்களுக்கென தனித்தனி சிறை அறைகள் உள்ளன. சுமார் ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட சிறைக் கைதிகள் இங்கு அடைக்கப்பட்டுள்ளனர். இந்த சிறைச்சாலையில் நாவல், மாமரம் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட பழ மரங்கள் உள்ளன.
இந்நிலையில், சிறையில் உள்ள விசாரணை கைதிகள் ஒரு குழுவினர் கற்களைக் கொண்டு மரத்தின் மீது எறிந்து பழங்களைப் பறிக்க முயன்றனர். அவர் எறிந்த கற்கள் மற்ற சிறைவாசிகள் மீதும், சாலையில் செல்லக்கூடிய வாகன ஓட்டிகள் மீதும் விழுந்ததாக கூறப்படுகிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதனை அறிந்த, காவலர்கள் பழத்தைப் பறிக்க முயன்ற கைதிகளைத் தடுத்து நிறுத்தி, பழங்களைப் பறிக்கத் தடை விதித்தனர். இதனால் கைதிகள், காவலர்களுடன் தகராறு செய்து ரகளையில் ஈடுபட்டுள்ளனர். தொடர்ந்து, சிறை வளாகத்தின் மேற்பகுதியிலும், முன்பகுதியிலும் கைதிகள் கூச்சலிட்டுள்ளனர். உடனடியாக பாதுகாப்பிற்காக காவலர்கள் குவிக்கப்பட்டு கைதிகள் அனைவரும் வலுக்கட்டாயமாக சிறை அறையில் அடைக்கப்பட்டனர். இதனால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. மேலும், சிறை வளாகத்தில் இருக்கக்கூடிய பழங்களைப் பறிக்கக் கூடாது என்று கைதிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.