நீண்ட இடைவெளிக்குப் பிறகு இணையத்தில் தோன்றி தனது பக்தர்களுக்கு அருள்பாலித்திருக்கிறார் நித்யானந்தா. “அழியாத ஒன்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டாலே பரமசிவன் நமக்குள் வந்துவிடுவார். அந்த பக்தியில் கரையும் நிலைதான் சமாதி நிலை. எனப் பக்தர்களிடம் வழக்கமான உற்சாகத்தில் உரையாற்றி இருக்கிறார்.
சர்ச்சைகளுக்குப் பஞ்சமில்லாதவர் நித்யானந்தா என்றாலும் கடந்த சில மாதங்களாகவே அவரின் உடல் நிலை குறித்து அதிக அளவில் வதந்திகள் பரவின. அவர் இறந்து விட்டதாகச் செய்திகள் பரவிய நிலையில், ‘திரும்ப வந்துட்டேன்னு சொல்லு’ என முகநூல் பதிவின் மூலம் சர்ச்சைகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தார். ஆனாலும், நித்யானந்தா உடல் நலக்குறைவால் இருப்பதை அவர் வெளியிட்ட படங்களும், அவர் கடிதமும் உறுதி செய்தன.
இது குறித்து முகநூல் பதிவில் தெரிவித்துள்ள நித்யானந்தா, “என்னால் உணவு எதையும் எடுத்துக் கொள்ள முடியவில்லை. வாயில் உணவை வைத்தால் அடுத்த சில நிமிடங்களில் வாந்தி எடுக்கிறது. உறக்கம் முற்றிலுமாக இல்லை. 24 மணி நேரமும் எனது மூளை விழித்துக் கொண்டிருக்கிறது. இப்படி ஆறுமாதங்களுக்கும் மேலாக என் உடல் சமாதி நிலையில் இருப்பது வழக்கம். எனது கிரகங்களும் எனக்குச் சாதகமான நிலையில் இருப்பதால், எனக்கு இப்போது மரணமோ, சமாதியோ இல்லை. எனது வாழ்வில் நான் செய்ய வேண்டியதை முழுமையாகச் செய்து முடித்துள்ளேன். எனக்கு இந்த உலகில் வாழ ஆசையும் இல்லை, இந்த உலகத்தை விட்டு வெளியேறும் வெறுப்பும் இல்லை. உங்களைப் போலவே நானும் பரமசிவன் என்ன செய்யப்போகிறார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார். நித்யானந்தா உடல்நிலை குறித்து அவரது பக்தர்கள் கலக்கத்தில் ஆழ்ந்தனர். அடிக்கடி இணையத்தில் நேரலை மூலம் அருளாசி வழங்கி வந்த நித்யானந்தா, கடந்த மூன்று மாதங்களாகவே அதை நிறுத்திக் கொண்டார்.
இந்த நிலையில் குருபூர்ணிமா அன்று பக்தர்களிடம் தோன்றி ஆசி வழங்கப்போவதாகத் தெரிவித்திருந்தார். அதன்படி நேற்று இரவு நேரலையில் தோன்றிய நித்யானந்தா, இன்று முதல் தனது 42-வது சாதுர்மாசியத்தை தொடங்கப் போவதாக அறிவித்தார். வழக்கம் போல ஆங்கிலத்திலும், தமிழிலும் உற்சாகமாக உரையாற்றிய அவர், “அழியாத ஒன்றின் மீது ஈர்ப்பு வந்துவிட்டாலே பரமசிவன் நமக்குள் வந்துவிடுவார். அந்த பக்தியில் கரையும் நிலைதான் சமாதி நிலை. கடந்த மூன்று மாதகாலம் எனக்கு ஒரு யுகமாகக் கழிந்தது. தற்போது எனது உடல், மூளை என அனைத்திலும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது ” எனத் தெரிவித்தார். அறிவித்தபடி நித்யானந்தா நேரலையில் தோன்றி பேசியது அவரது பக்தர்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.