கர்நாடகாவில் கனமழை:  7 நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்லத் தடை!



கர்நாடகாவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனால் அடர்ந்த வனப்பகுதியில் உள்ள நீர்வீழ்ச்சிகளுக்குச் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் கடந்த மே மாதத்தில் பொழிய வேண்டிய தென்மேற்கு பருவமழை தாமதமாகியுள்ளது. இதனால் மாநிலம் முழுவதும் உள்ள அணைகளின் நீர்மட்டம் குறைந்து காணப்படுகிறது. இந்நிலையில் கடந்த இரு தினங்களாக கடலோர மாவட்டங்களான உடுப்பி, தக்‌ஷிண கன்னடா, சிக்கமகளூரு உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. காவிரி ஆறு உற்பத்தியாகும் குடகு மாவட்டத்திலும் பரவலாக மழை பெய்தது.

உத்தர கன்னடா மாவட்டத்தில் பெய்த கனமழையால் 500 ஏக்கர் நிலக்கடலை தோட்டம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இந்த மாவட்டத்தில் உள்ள ஹொன்னாவர் தாலுகா பாஸ்கரே கிராமத்தில் நிலக்கடலை தோட்டத்தில் தண்ணீர் தேங்கியுள்ளதால் தொற்று நோய் பரவும் அச்சம் ஏற்பட்டுள்ளது. மேலும் 500 ஏக்கர் பரப்பளவில் உள்ள 200 வீடுகள் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் உள்ளன. மலையில் தொடர் மழை பெய்தால் வீடுகளுக்குள் தண்ணீர் புகுமோ என்ற அச்சம் நிலவுகிறது.

கனமழை காரணமாக மங்களூரில் கடல் சீற்றமாக உள்ளது. இதன் காரணமாக எழும் ராட்சத அலைகள் மோதி கட்டுமானப்பணியின் போதே 196 கோடி ரூபாய் மானியத்தில் கட்டப்பட்டு வரும் ஜெட்டி சேதமடைந்துள்ளது. அத்துடன் கனமழை காரணமாக நீர்வீழ்ச்சிகளில் வெள்ளம் கொட்டி வருகிறது. குறிப்பாக பெல்காம் மாவட்டம், கானாபூர் தாலுகாவில் உள்ள படவாடே நீர்வீழ்ச்சி, சிக்கலே அருவி, பர்வாடா அருவி, சோர்லா காட் அருவி, வஜ்ரா அருவி உள்ளிட்ட 7 நீர்வீழ்ச்சிகளுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இப்பகுதிகளில் வனக்காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதனால் இந்த நீர்வீழ்ச்சி, அருவியைக் காண கர்நாடகா, கோவா, மகாராஷ்டிராஆகிய மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

x