அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் உங்கள் தலையில் அடித்தது ஏன்?- சர்ச்சையான வீடியோ குறித்து பெண் விளக்கம்!


செய்தியாளர்களை சந்தித்த கலாவதி

வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பெண்ணின் தலையில் பேப்பரால் தட்டியதாக வீடியோ வெளியான நிலையில், அப்பெண் இன்று செய்தியாளர்களை சந்தித்து, என்னை அவர் செல்லமாக தலையில் தட்டியதாக தெரிவித்துள்ளார்.

தமிழக வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், பெண் ஒருவரை தனது கையில் வைத்திருந்த பேப்பரால் தாக்குவது போன்ற வீடியோவை அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் அதில், "மக்கள் என்ன உங்கள் அடிமைகளா? விருதுநகர், பாலவநத்தம் கிராமத்தில் தீர்வு தேடி வந்த ஏழைத்தாயை அடித்த திமுக அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் அடுத்த 48 மணி நேரத்திற்குள் பதவி விலக வேண்டும். அல்லது அவரது வீட்டை பாஜக முற்றுகையிடும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்!" என குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், வீடியோவில் உள்ள விருதுநகர் மாவட்டம், பாலவநத்தத்தைச் சேர்ந்த கலாவதி இன்று செய்தியாளர்களை சந்தித்தார் அப்போது, "30 வருடங்களாக நல்லது கெட்டது அனைத்தையும் அவர்தான்(அமைச்சர்) பார்க்கிறார்.

பாலவநத்தத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு எனது 77 வயதான அம்மா சகுந்தலாவை கூடவே அழைத்துச் சென்றேன். அமைச்சரை சந்தித்து முதியோர் உதவித்தொகை வேண்டும் என்று மனு அளித்தேன். மனுவை பெற்றுக்கொண்டு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார். மேலும், இன்று முதியோர் உதவித்தொகைக்கான ஆணையைப் பெற்றுக்கொண்டேன்.

அமைச்சர் தாக்கியது குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "வேறு யாரும் இல்லை. எங்களுக்கு சொந்தக்காரர், அண்ணன் போல, அவரை 30 ஆண்டுகளாக எங்களுக்கு தெரியும். மனுவை வைத்து என்னை அடிக்கவில்லை. மாறாக, செல்லமாக தலையில் தட்டினார்" என்று பதிலளித்தார்.

x