சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது என்று அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களில் பிளஸ்2 பொதுத் தேர்வு முடிவு வெளியாகி உயர்படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மாணவர்கள் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருகிறது. அதே நேரத்தில் சிபிஎஸ்இ பிளஸ்2 மாணவர்களுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்பட வில்லை.
இந்நிலையில், சிபிஎஸ்இ தேர்வு முடிவு வெளியாகும் முன்பே மாணவர் சேர்க்கையை முடித்துக் கொள்ளக் கூடாது என்று நாடு முழுவதும் உள்ள அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பல்கலைக்கழக மானியக்குழு (யூஜிசி) இன்று உத்தரவிட்டுள்ளது. மேலும், மாணவர்களுக்கு கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் உரிய அவகாசம் தர வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.
இதனிடையே, தமிழகத்தில் வரும் 18-ம் தேதி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் திறக்கப்படும் என்று கல்லூரி கல்வி இயக்ககம் இன்று அறிவித்துள்ளது. அதே நேரத்தில், பொறியியல் மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்வு இன்னும் நடைபெறவில்லை.