காதல் விவகாரத்தில் இளைஞரை படுகொலை செய்து சடலத்தை சாக்கில் கட்டி அணையின் அருகே வீசியது தொடர்பாக பெண்ணின் தந்தை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
திண்டுக்கல் மாவட்டம் சித்தையன்கோட்டை அருகே சேடபட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் அழகுவிஜய் (24), கொத்தனார் வேலை செய்து வந்தார். இதே பகுதியைச் சேர்ந்த தமிழ்ச்செல்வனின் மகன் அஜித்(26). இவரும் கூலி வேலை செய்து வருகிறார். இவரது 17 வயது தங்கை கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருகிறார்.
இந்நிலையில், அழகுவிஜய் துர்காவை காதலித்து வந்ததாக தெரிகிறது. இவர்களது காதல் பெண் வீட்டாருக்கு தெரிய வரவே, இருவரையும் கண்டித்துள்ளனர். இதுகுறித்து, அவ்வப்போது தகராறும் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் காதலர்கள் இருவரும் நேற்று இரவு சேடபட்டியில் தனிமையில் சந்தித்து பேசியதாக கூறப்படுகிறது.
இந்தத் தகவல் அறிந்து அங்கு வந்த பெண்ணின் அண்ணன் அஜித் தங்கையைக் கண்டித்ததுடன், அவர் கண் முன்பே அழகுவிஜயை கடுமையாகத் தாக்கியுள்ளார்.
இதில் நிலைகுலைந்து கீழே விழுந்த அழகுவிஜய் உயிரிழந்தார். உடனடியாக கொலையை மறைப்பதற்காக ஒரு சாக்குப் பையில் சடலத்தை கட்டி இருசக்கர வாகனத்தில் வைத்து ஆத்தூர் காமராஜர் அணையின் கரை ஓரத்தில் புதருக்குள் தூக்கி வீசிச் சென்றுவிட்டனர். நடந்த சம்பவம் குறித்து தனது தந்தை தமிழ்ச்செல்வனிடம் அஜித் தெரிவித்துள்ளார்.
இ்ந்நிலையில், இன்று காலை அஜித் வீட்டின் அருகே படிந்திருந்த ரத்தக்கறையைப் பார்த்த அப்பகுதி இளைஞர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து செம்பட்டி காவல்துறையினர் நேரில் வந்து வீட்டில் இருந்த அஜித்தின் தந்தை தமிழ்ச்செல்வனை விசாரித்தனர். அவர், அளித்த தகவலின் அடிப்படையில் ஆத்தூர் காமராஜர் அணை பகுதியில் சாக்கு மூட்டையில் கிடந்த அழகுவிஜயின் சடலத்தைக் கைப்பற்றி உடலை திண்டுக்கல் அரசு மருத்துமனைக்கு உடற்கூற்கூறாய்விற்காக காவல்துறையினர் அனுப்பி வைத்தனர்.
சாக்கு மூட்டையில் சடலாக அழகுவிஜய் கிடந்த இடத்தை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாஸ்கரன், துணை காவல் கண்காணிப்பாளர் முருகேசன் மற்றும் செம்பட்டி ஆய்வாளர் செந்தில்குமார் உள்ளிட்டோர் பார்வையிட்டனர். மேலும், தமிழ்ச்செல்வனை கைது செய்த காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். இவ்வழக்கில் தொடர்புடைய அஜித் மற்றும் அவரது தங்கையை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.