உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளது… அருள்வாக்கு பூசாரி அபேஸ் செய்த 60 பவுன் நகை: மனைவியோடு கைது செய்யப்பட்டது எப்படி?


அருள் வாக்கு கூறுவது போல் பலரிடமும் சுமார் 60 பவுன் நகைகளை மோசடி செய்து கொள்ளையடித்த பூசாரி மற்றும் அவரது மனைவியை ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் துறையினர் கைது செய்து இருவரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பெருமாள்பட்டியைச் சேர்ந்த தம்பதி பாலமுருகன்-தங்கமாயா. காய்கறி வியாபாரம் செய்து வந்த பாலமுருகனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் வியாபாரத்திற்கு செல்ல முடியவில்லை. இந்நிலையில், வீட்டின் அருகில் உள்ள கோயில் பூசாரியிடம் அருள்வாக்கு கேட்டால் கணவரின் உடல் நலன் தேறிவிடும் என்று தங்கமாயாவிடம் அக்கம்பக்கத்தினர் கூறினர்.

இதனையடுத்து, கோயிலுக்குச் சென்ற தங்கமாயா பூசாரி பழனிகுமாரிடம், தனது கணவர் உடல்நிலை சரியில்லை என்று கூறி அருள்வாக்கு கேட்டுள்ளார். அப்போது, உங்கள் குடும்பத்திற்கு தோஷம் உள்ளதாகவும், அதனைக் கழிப்பதற்கு வீட்டில் உள்ள நகைகளை எடுத்து வரும்படியும் பழனிக்குமார் கூறியுள்ளார். இதனை நம்பி தனது வீட்டில் இருந்த 26.6 பவுன் நகையைப் பழனிகுமாரிடம் அவர் கொடுத்ததுள்ளார்.

ஆனால், நகையைப் பெற்றுக் கொண்ட பூசாரி அதனைத் திருப்பித் தராமல் இருந்துள்ளார். பலமுறை கேட்டும் திருப்பித் தராததால், தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த தங்கமாயா இதுகுறித்து குறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதன் பேரில் வழக்குப் பதிந்த காவல்துறையினர், பழனிக்குமார் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி ரம்யா ஆகியோரை இன்று கைது செய்தனர். இருவரிடமும் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், தங்கமாயாவை ஏமாற்றியது போல், பலரையும் ஏமாற்றி இருவரும் சுமார் 60 பவுன் நகைகளை மோசடி செய்தது தெரிய வந்தது.

x