குடும்ப சூழலால் கல்வியை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் வாய்ப்பு: தனி திட்டம் வகுக்க அரசுக்கு உயர் நீதிமன்றம் ஆலோசனை


குடும்ப சூழல்களால் கல்வி வாய்ப்புகளை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் கற்கும் வாய்ப்பு வழங்க திட்டம் வகுக்க தமிழக அரசு முன்வர வேண்டும் என உயர் நீதிமன்றம் ஆலோசனை தெரிவித்துள்ளது.

தமிழக நெடுஞ்சாலைத்துறையில் 1997-ல் கேங் மஸ்தூர் பணியில் சேர்ந்த பலருக்கு 2013, 2014-ல் 2ம் நிலை சாலை ஆய்வாளர் பதவி உயர்வு வழங்கப்பட்டது. பின்னர் சாலை ஆய்வாளர் பணிக்கான பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறவில்லை என்று கூறி அவர்கள் கேங் மஸ்தூராக பதவி இறக்கம் செய்யப்பட்டனர். இதை ரத்து செய்யக்கோரிய இவர்களின் மனுவை தனி நீதிபதி தள்ளுபடி செய்தார். அதற்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், எஸ்.ஸ்ரீமதி ஆகியோர் கொண்ட அமர்வு பிறப்பித்த உத்தரவில், "அரசு ஊழியர்களுக்கு தங்களின் மொத்த பணிக்காலத்தில் குறைந்த ஒரு பதவி உயர்வாவது பெற உரிமை உண்டு என உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மனுதாரர்கள் அனைவரும் 50 வயதை தாண்டியவர்கள். அவர்கள் சாலை ஆய்வாளராக 5 ஆண்டுகள் பணிபுரிந்துள்ளனர். இப்போது அவர்களை பதவி இறக்கம் செய்தால் அவர்களின் குடும்பங்கள் பாதிக்கப்படும்.

மேலும் மனுதாரர்கள் 20.11.2017-க்கு முன்பு பிரி பவுண்டேசன் படிப்பு முடித்துள்ளனர். இதனால் அவர்கள் பதவி உயர்வு பெற தகுதியானவர்கள் தான். அவர்களை பதவி உயர்வு பணியிடத்தில் பணிபுரிய அனுமதிப்பதே சரியானது. மனுதாரர்கள் குடும்ப சூழ்நிலைகளால் 10, 12 படிப்புகளை தவறவிட்ட நிலையில் தங்களை கல்வித் தகுதி பெற்றவர்களாக மாற்ற முயற்சி எடுத்துள்ளனர். இதனால் உரிய கல்வி வாய்ப்புகளை தவறவிட்டவர்களுக்கு மீண்டும் கற்கும் வாய்ப்பு பெறுவதற்கான திட்டத்தை வகுக்க அரசு முன்வர வேண்டும். அந்த திட்டம் வழக்கமான நடைமுறையில் கல்வி கற்றவர்களின் உரிமையை பாதிக்காதவாறு இருக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

x