காவிரியில் பாய்ந்து வரும் ஒரு லட்சம் கன அடி நீர்... 100 அடியை எட்டியது மேட்டூர் அணை: மக்களுக்கு எச்சரிக்கை


ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு ஒரு லட்சம் கனஅடி நீர் வந்து கொண்டிருப்பதால் மிக வேகமாக நிரம்பி வருகிறது மேட்டூர் அணை. தற்போதைய நிலையில் அணையின் நீர்மட்டம் 100 அடியை தாண்டியுள்ள நிலையில் இதே அளவு நீர் வரத்து இருந்தால் இரண்டு மூன்று நாட்களில் அணை நிரம்பும் வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

கடந்த ஒரு மாத காலமாக காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளில் ஒரே சீரான மழை இல்லாத காரணத்தால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு திடீரென அதிகரித்தும், திடீரென வெகுவாக குறைந்தும் காணப்பட்டது. சில தினங்களுக்கு முன் வினாடிக்கு 2,500 கன அடி நீரே வரத்து இருந்தது. ஆனாலும் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தொடர்ந்து சராசரியாக பத்தாயிரம் கன அடி அளவுக்கு தண்ணீர் திறக்கப்பட்டு வந்தது.

அதனால் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 24-ம் தேதி 100 அடியாக உயர்ந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் அந்த அளவு குறையாமல் நீடித்து வந்த நிலையில் கடந்த 8-ம் தேதியன்று 100 அடிக்கு கீழே சரிந்தது. தற்போது கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்பிடிப்பு பகுதிகளிலும், கேரளத்தில் உள்ள வயநாட்டிலும் கன மழை பெய்து வருவதால் கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பின.

அதனால் பாதுகாப்பு கருதி அணைகளுக்கு வரும் மொத்த நீரும் அப்படியே காவிரி ஆற்றில் திறக்கப்படுகிறது. அதன் காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு காவிரியில் ஒரு லட்சத்து 10 ஆயிரம் கன அடி அளவிற்கு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இன்று காலை நிலவரப்படி தமிழக காவிரி பகுதியில் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு ஒரு லட்சம் கன அடியாக உள்ளது. மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 65 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.

மேட்டூர் அணையின் வரலாற்றில் 68-வது ஆண்டாக நான்கு நாட்களுக்குப் பிறகு இன்று அதிகாலை மேட்டூர் அணை நீர்மட்டம் மீண்டும் 100 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு 15,000 கன அடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது. நீர்வரத்து அதிகரித்து வருவதால் காவிரி கரையில் இருந்த மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதனால் அருவிகளில் குளிக்கவும், ஆற்றில் பரிசல் இயக்கவும் 3வது நாளாக இன்றும் தடை நீடிக்கிறது.

x