இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவிற்கு இடைக்காலத்தடை: மதுரை ஆதீனம் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட் அதிரடி


மதுரை ஆதீனத்துக்குச் சொந்தமான கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயில் செயல் அலுவலர் நியமனத்துக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை இடைக்கால தடை விதித்துள்ளது.

மதுரை ஆதீனம் ஞானசம்பந்த தேசிக பரமாச்சாரிய சுவாமிகள், உயர் நீதிமன்ற கிளையில் தாக்கல் செய்த மனு: மதுரை ஆதீன மடத்தின் கீழ் தஞ்சை, திருவாரூர், கஞ்சனூர், திருப்புறம்பியம் ஆகிய இடங்களில் நான்கு கோயில்கள் உள்ளன. விதிப்படி ஆதீன கோயில்களுக்கு செயல் அலுவலரை நியமிக்க மூன்று நபர்களைத் தேர்வு செய்து ஆதீன மடத்துக்கு இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் பரிந்துரை செய்ய வேண்டும். அவர்களில் ஒருவரை செயல் அலுவலராக ஆதீனம் தேர்வு செய்வார்.
ஆனால், இந்த நடைமுறையைப் பின்பற்றாமல் கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயிலுக்குச் செயல் அலுவலரை நியமித்து அறநிலையத்துறை இணை ஆணையர் 24.1.2022-ல் உத்தரவிட்டுள்ளார். ஆதீன கோயில்களுக்குச் செயல் அலுவலரை நியமிக்க அறநிலையத்துறை ஆணையர் தான் நியமிக்க வேண்டும். இதிலும் விதிமீறல் நடைபெற்றுள்ளது. செயல் அலுவலராக நியமிக்கப்படுபவர் ஆதீனத்துக்குத் தகவல் தெரிவித்துவிட்டு பணிகளைத் தொடங்க வேண்டும். ஆனால், கஞ்சனூர் கோயில் செயல் அலுவலராக நியமிக்கப்பட்டுள்ள கிருஷ்ணகுமார், தற்போது வரை ஆதீனத்தை சந்திக்கவில்லை. கோயில் தொடர்பான பதிவேடுகள், நகை தொடர்பான விபரங்களையும் ஆதீனத்திடம் ஒப்படைக்கவில்லை.

எனவே, கஞ்சனூர் அக்னீஸ்வரர் சுவாமி கோயிலுக்கு செயல் அலுவலரை நியமித்து இந்து சமய அறநிலையத் துறையின் இணை ஆணையர் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தும், ஆதீன கோயில்களுக்குச் செயல் அலுவலர்களை நியமிக்கும் போது விதிகளை பின்பற்றவும் உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார். ஆதீனம் மடம் சார்பில் வழக்கறிஞர் அருண்சுவாமிநாதன் வாதிட்டார். பின்னர் நீதிபதி, கஞ்சனூர் அக்னீஸ்வரர் கோயில் செயல் அலுவலராக கிருஷ்ணகுமார் நியமிக்கப்பட்டதற்கு இடைக்கால தடை விதிக்கப்படுகிறது. விதிப்படி மூன்று பேரை அறநிலையத்துறை ஆணையர் தேர்வு செய்து ஆதீனத்திற்குப் பரிந்துரை செய்யலாம் என உத்தரவிட்டு, விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்தார்.

x