ஹத்ராஸ் சம்பவத்தில் முக்கிய குற்றவாளி மதுக்கர் கைது: இன்று நீதிமன்றத்தில் ஆஜர்!


கடந்த ஜூலை 2ம் தேதி உத்தர பிரதேசம் மாநிலம் ஹத்ராஸ் பகுதியில் போலே பாபா என்று அழைக்கப்படும் சூரஜ்பால் சத்சங்கம் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. நிகழ்ச்சியின் முடிவில் அரங்கை விட்டு வெளியேறிய போலே பாபாவின் காலடி மண்ணை எடுக்க ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் முண்டியடித்துள்ளனர். அப்போது ஏற்பட்டால் திடீர் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் உயிரிழந்தனர். சம்பவ இடத்திலேயே 30-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மேலும் பல உயிரிழந்தனர்.

தற்போது வரை 121 பேர் இந்த சம்பவத்தில் உயிரிழந்திருக்கும் நிலையில், மேலும் பலர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக ஹத்ராஸ் மாவட்ட கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த போலே பாபாவின் உதவியாளர் தேவ் பிரகாஷ் மதுக்கர் என்பவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவரை கைது செய்ய போலீஸார் தீவிர நடவடிக்கைகள் மேற்கொண்டு வந்த நிலையில், டெல்லியில் தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வருவதாக மதுக்கர் பதுங்கி இருந்தார்.

ஏற்கனவே 6 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இன்று காலை மருத்துவமனையில் தேவ் பிரகாஷ் மதுக்கரை போலீஸார் கைது செய்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளனர். இதனிடையே இந்த சம்பவம் குறித்து பேசிய மதுக்கரின் வழக்கறிஞர், இந்த வழக்கில் போலீஸாருக்கு அனைத்து ஒத்துழைப்பையும் வழங்க உள்ளதாகவும், மதுக்கர் சார்பில் நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனுத் தாக்கல் செய்யப் போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

x