மதுரையில் இருந்து 24 கி.மீ தொலைவில் உள்ளது குட்லாடம்பட்டி. வாடிப்பட்டி ஒன்றியத்திற்குட்பட்ட வனப்பகுதியான இங்கு பெரியார் நினைவு சமத்துவபுரம் உள்ளது. 1998-ல் முன்னாள் முதல்வர் கருணாநிதியால் உருவாக்கப்பட்ட இந்த சமத்துவபுரத்தில் 100 வீடுகள் உள்ளன.
இங்கு வசிக்கும் மக்கள் பெரும்பாலும் வனம் சார்ந்த பகுதிகளில் கிடைக்கும் பொருட்களைச் சேகரித்தும், பூ, மா விவசாயம் பார்த்தும் பிழைப்பவர்கள். கடந்த 24 ஆண்டுகளாக இந்த சமத்துவபுர வீடுகள் புனரமைக்கப்படாமல் இருந்தன. இதனால் பல வீடுகள் சிதிலமடையும் நிலைக்குப் போயின. இந்த நிலையில், சமத்துவபுர வீடுகளைப் புனரமைக்க முடிவுசெய்து சிறப்பு நிதி ஒதுக்கப்பட்டது. அதன் அடிப்படையில் சமத்துவபுர வீடுகளை இடிக்கும் பணி இப்போது தொடங்கியுள்ளது. ஆனால், இங்கு வசிக்கும் மக்களிடம் தங்களது வீடுகள் புதுப்பொழிவு பெறப்போகிறது என்ற மகிழ்ச்சியை விட முன்னறிவிப்பின்றி வீடுகளை இடிப்பதால் ஏற்பட்டுள்ள சங்கடங்களே மேலோங்கி நிற்கிறது.
இதுகுறித்து நம்மிடம் பேசிய அங்கு வசிக்கும் பாண்டியன், "முறையான எந்த அறிவிப்பும் வெளியிடாமல் வீடுகளை இடிக்கிறார்கள். வீடுகளை இடிக்கப் போகிறோம் என்றோ, இந்தக் காலத்துக்குள் வீடுகளைக் கட்டிமுடிக்கப் போகிறோம் என்றோ யாரும் முன்கூட்டியே சொல்லவில்லை. இங்குள்ள பலர் வெளியூர்களில் தங்கி வேலை செய்கிறார்கள். பூட்டிக் கிடக்கும் அவர்களது வீடுகளில் இருந்து பொருட்களை எடுக்காமலேயே வீடுகளை இடிக்கிறார்கள்.
இடிக்கப்படும் வீடுகளில் வசிப்பவர்களை எந்த வசதியும் இல்லாத சமுதாயக் கூடத்தில் தங்கச் சொல்கிறார்கள். அங்கே என்ன பாதுகாப்பு இருக்கிறது? மழைக்காலம் வரப்போகிறது. மொத்தமாக வீடுகளை இடித்துவிட்டால் இங்குள்ளவர்கள் தங்குவதற்கு எங்கு போவார்கள்? எனவே, பராமரிப்பு பணிகளைத் திட்டமிட்டு நடத்த வேண்டும்" என்றார்.
"சமத்துவபுர வீடுகள் புனரமைக்க ஒதுக்கப்பட்ட சிறப்பு நிதி எவ்வளவு? யார் இந்த பணிகளை மேற்கொள்கிறார்கள் என்ற விவரங்கள் இல்லை. பணிகள் எப்போது தொடங்கி எப்போது முடியும் என்ற திட்ட வரையறையும் இல்லை” என்று சொல்லும் சிபிஐ (எம்.எல்) கட்சியின் மதுரை மாவட்ட செயலாளர் மதிவாணன், “சமத்துவபுரத்தில் உள்ள மக்களைக் கொண்டு நலக்குழு அமைத்து அம்மக்களின் ஒத்துழைப்போடு இப்பணிகளைத் தொடர வேண்டும். அப்போதுதான் பணிகள் முறைகேடுகள் இல்லாமல் செம்மையாக நடக்கும்” என்றார்.
இதுகுறித்து வாடிப்பட்டி வட்டார வளர்ச்சி அதிகாரிகளிடம் கேட்ட போது,"சமத்துவபுர மக்களிடம் பத்து நாட்களாக நாங்கள் பேசிக்கொண்டு தான் இருக்கிறோம். புனரமைப்பு வேலைகள் துவங்கி மூன்று நாட்களாகிறது. எவ்வளவு நிதி ஒதுக்கீடு, பணி விவரம் குறித்த தகவல்களை பொறியாளர்கள் தயார் செய்து கொண்டிருக்கிறார்கள். விரைவில் அதற்கான அறிவிப்புப் பலகையை வைப்போம். எப்படியும் இந்தப் பணி முடிய 6 மாதங்களாகும். ஏனெனில், திட்டம் பெரியது. ஒரே நேரத்தில் அனைவரையும் வெளியேற்றி பணிகளைச் செய்யவில்லை. ஒவ்வொரு லைனாகத் தான் பணிகளைச் செய்கிறோம்" என்றனர்.
சமத்துவபுரத்து வீடுகளை இடிப்பது மீண்டும் புனரமைத்துக் கட்டுவதற்காகத்தான் என்றாலும் அங்கு வசிக்கும் மக்களுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளைச் செய்துகொடுத்துவிட்டு பணிகளைத் தொடர்ந்தால் யார் என்ன சொல்லப் போகிறார்கள்?