அரசு பள்ளிகளில் திருடப்பட்ட லேப்டாப்களை இதுவரை ஏன் கண்டுபிடிக்க வில்லை என்று போலீஸாரை நோக்கி கேள்வி எழுப்பிய மதுரை உயர் நீதிமன்றம், அதன் ஐபி, மேக் முகவரியை கொண்டு கண்டுபிடியுங்கள் என்று போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளது.
ராமநாதபுரம் கடலாடி அரசு மேல் நிலைப்பள்ளி ஓவிய ஆசிரியர் விஸ்வநாதன் பணியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்டார். அதனை ரத்து செய்யக்கோரி, அவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை நீதிபதி பி.புகழேந்தி விசாரித்தார்.
இதுகுறித்து டிஜிபி சார்பில் அளிக்கப்பட்ட பதிலில், பள்ளிகளில் காணாமல் போன லேப்டாப்கள் குறித்தும் கூறப்பட்டிருந்தது. தமிழகத்தில் கடந்த 2012 முதல் 2021 வரையில் அரசு பள்ளிகளில் லேப்டாப் திருட்டு தொடர்பாக 189 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. 116 லேப்டாப்கள் மீட்கப்பட்டுள்ளன. 69 வழக்குகள் லேப்டாப்கள் கண்டுபிடிக்க முடியாததால் கைவிடப்பட்டுள்ளன என கூறப்பட்டிருந்தது.
அதனையடுத்து நீதிபதி பிறப்பித்த உத்தரரவில், "மனுதாரர் பள்ளியில் 2015-ல் 20 லேப்டாப்கள் திருடப்பட்டது தொடர்பான வழக்கு முடிக்கப்பட்டதை மனுதாரர் தகவல் உரிமை சட்டத்தின் கீழ் தெரிந்துள்ளார். பின்னர் அந்த வழக்கை மீண்டும் விசாரிக்க உயர் நீதிமன்றத்தில் உத்தரவு பெற்றார். அதன்படி மறுபடியும் விசாரணை நடத்தப்பட்டது. அதன் பின்னரும் கண்டுபிடிக்க முடியவில்லை என்று கூறி வழக்கு முடிக்கப்பட்டது.
மனுதாரர் பள்ளியில் பிளஸ் 2 மாணவர்களுக்கு கொடுக்க 132 லேப்டாப்கள் இருந்தது. அதில் 20 மட்டும் திருடப்பட்டது வியப்பாக உள்ளது.
வழக்கின் விசாரணை அதிகாரிகள் அடிக்கடி மாற்றப்பட்டுள்ளனர். முதல் விசாரணை அதிகாரி விசாரித்த 12 சாட்சிகளையே அடுத்தடுத்து வந்த விசாரணை அதிகாரிகளும் விசாரித்துள்ளனர். உயர் நீதிமன்றம் மீண்டும் விசாரிக்க உத்தரவிட்ட நிலையில் வழக்கை விசாரித்த அதிகாரியும் வழக்கை முடிக்க பரிந்துரை செய்துள்ளார்.
ஒவ்வொரு லேப்டாப்பிலும் ஐபி முகவரி, மேக் (எம்ஏசி) முகவரி குறிப்பிடப்பட்டிருக்கும். அவற்றை வைத்து அந்த லேப்டாப்களை கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவில்லை. இவ்வாறு விசாரணையில் பல்வேறு குறைபாடுகள் உள்ளன.
இதனால் கடலாடி அரசு மேல் நிலைப்பள்ளியில் 2015-ல் 20 லேப்டாப் திருடப்பட்ட வழக்கை திரும்ப விசாரிக்க விசாரணை அதிகாரியை ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி நியமிக்க வேண்டும். அந்த விசாரணையை அவர் கண்காணிக்க வேண்டும்.
திருடப்பட்ட லேப்டாப்களை அவற்றின் ஐபி முகவரி, மேக் முகவரியை கொண்டு விரைவில் கண்டுபிடிக்க தொழில்நுட்ப வல்லுனர்களின் உதவியை போலீஸார் நாடலாம். லேப்டாப் வழக்கின் மறு விசாரணை முடிவுக்கு வரும் வரை மனுதாரர் மீதான பணியிடை நீக்கம் நிறுத்தி வைக்கப்படுகிறது" என்று கூறியுள்ளார்.