விடுமுறை நாளான இன்று ஒரேநாளில் வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த ஒரே ஊரைச் சேர்ந்த இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட மூன்று பெண்கள் கடல் அலையில் சிக்கி உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள முக்கிய சுற்றுலா தளங்களில் ஒன்றான வேளாங்கண்ணி கிறிஸ்தவர்களின் புனித தலமாகவும் விளங்குகிறது. இங்கு கிறிஸ்தவர்கள் மட்டுமல்லாது இதர மதங்களைச் சேர்ந்தவர்களும் வந்து செல்வது வழக்கம். அதிலும் விடுமுறை தினத்தில் ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருகிறார்கள்.
விடுமுறை நாளான இன்றும் அப்படி வேளாங்கண்ணிக்கு ஏராளமானோர் வந்திருந்தனர். அவர்களில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ராஜகம்பீரம் என்ற ஊரில் இருந்து உறவினர்கள் 15 பேர் சுற்றுலா வந்துள்ளனர். வேளாங்கண்ணி மாதா கோயிலுக்கு சொந்தமான விடுதியில் தங்கிய அவர்கள் கடலில் குளிக்க சென்றுள்ளனர். இதில் ஆரோக்கியஷெரின் (19), ரியானா (13), சஹானா (14) ஆகிய மூவரும் குளித்துக் கொண்டிருந்தபோது கடல் சீற்றத்தின் காரணமாக திடீரென கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர்.
அவர்கள் இழுத்துச் செல்லப்படுவதைக் கண்டதும் அங்கிருந்த மற்றவர்கள் உடனடியாக செயல்பட்டு மூவரையும் மீட்டு, 108 ஆம்புலன்ஸ் மூலம் நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களை பரிசோதனை செய்த மருத்துவர், மூவரும் ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இறந்த மூன்று பேரின் உடல்களும் பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. வேளாங்கண்ணிக்கு சுற்றுலா வந்த இரண்டு சிறுமிகள் உள்ளிட்ட மூன்று பேர் கடல் அலையில் சிக்கி உயிரிழந்த சம்பவம் வேளாங்கண்ணியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.