பெண்கள் போல உடை அணிந்து வழிப்பறியில் ஈடுபட்ட கும்பல்… துரத்திய போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு: என்கவுன்டரில் கொள்ளையன் பலி


பெண் வேடமணிந்த கொள்ளையர்கள் மோனு, நிகில்.

டெல்லியில் பெண்கள் வேடம் போட்டு வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட கும்பலை போலீஸார் துரத்திச் சென்ற போது அந்த கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் கொள்ளையன் ஒருவர் பலியானார்.

டெல்லியில் நேற்று இரவு யமுனாநகர் காதர் பகுதியில் பெண்களின் உடையில் சில இளைஞர்கள் துஷார் என்பவரை வழிமறித்து செல்போனை பறித்தனர். அதை அவர் தரமறுத்ததால், அவரைத் தாக்கி செல்போனைப் பறித்துச் சென்றனர். இதுகுறித் உஸ்மான்பூர் காவல்நிலையத்தில் துஷார் புகார் கொடுத்தார். இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

இதையடுத்து அந்த வழிப்பறிக்கும்பல் காதர் பகுதியில் இருந்து ஒன்றரை கி.மீ தொலைவில் உள்ள காட்டுப்பகுதியில் பதுங்கி இருப்பது தெரிய வந்தது. அங்கு சென்ற போலீஸார், அக்கும்பலை வெளியே வரச்சொல்லி அறிவிபபு செய்தனர். ஆனால், திடீரென அந்த கும்பல் போலீஸார் மீது துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதனால் போலீஸாரும் துப்பாக்கியால் திருப்பிச் சுட்டனர்.
இதில், ஆகாஷ்(23) என்பவருக்கு குண்டுக்காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் சிகிச்சைக்காக ஜெபிசி மருத்துவமனைக்கும் பின் மேல்சிகிச்சைக்காக எல்என்ஜெபி மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி ஆகாஷ் உயிரிழந்தார். இவர் வழிப்பறி, கொள்ளைச்சம்பவங்களில் ஈடுபட்டவர் என்று தெரிய வந்தது. அவரது கூட்டாளிகள் விஷால், மோனு, நிகில் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இதில் மோனுவும், நிகிலும் பெண் உடையில் கொள்ளையில் ஈடுபடுவது தெரிய வந்தது. டெல்லியில் கொள்ளையன் என்கவுன்டர் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

x