திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம் பெண் மர்மமான முறையில் உயிரிழந்ததால், அவரது இறப்புக்கான காரணம் தெரிய வேண்டும் என்று உறவினர்கள் மருத்துவமனை முன்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.
தேனி மாவட்டம், உத்தமபாளையத்தைச் சேர்ந்தவர் வினித் (25). கூலித் தொழிலாளியான இவரும், திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த சத்யாவும் (21) ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். ஒன்றரை மாதத்திற்கு முன்பு பெற்றோர் சம்மதத்துடன் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது.
திருமணத்திற்கு பிறகு உத்தமபாளையத்தில் கணவர் வீட்டில் சத்யா வாழ்ந்து வந்தார். இந்நிலையில், நேற்று வீட்டில் இருந்த சத்யா திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார். தொடர்ந்து, வீட்டில் இருந்தவர்கள் சத்யாவை உத்தமபாளையம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், சத்யா ஏற்கெனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து, சத்யாவின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட உடன் மருத்துவமனை வந்தனர். மேலும், தங்கள் மகள் சாவில் மர்மம் இருப்பதாகவும், வினித் குடும்பத்தினர் மீது விசாரணை நடத்த வேண்டும் எனவும் கோரிக்கை வைத்து மருத்துவமனை முன்பு குவிந்த உறவினர்கள் இன்று காலை போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, சத்யாவின், உடல் உடற்கூறாய்விற்காக தேனி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்படும் என்றும் அதன் ஆய்வு முடிவைப் பொறுத்தே இறப்புக்கான காரணம் தெரியும் என்று காவல்துறையினர் தெரிவித்த நிலையில் போராட்டத்தை கைவிட்டனர்.
திருமணமான ஒன்றரை மாதத்தில் இளம்பெண் மர்மமான முறையில் இறந்தது குறித்து உத்தமபாளையம் ஆர்டிஓ விசாரணை நடத்தி வருகிறார். மேலும், அவர் வரதட்சணை கொடுமை காரணமாக உயிரிழந்தாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.