நிலப்பரப்பின் அடிப்படையில் கூட்டுறவு கடனுக்கான நிதி: தமிழக அரசு ஒதுக்கீடு செய்ய பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தல்


பி.ஆர்.பாண்டியன்

விவசாயிகளுக்கு வழங்கப்படும் கடன்களுக்காக, கூட்டுறவு வங்கிகளுக்கு வழங்கப்படும் நிதியை நிலப்பரப்பின் அடிப்படையில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று தமிழக அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் இன்று அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "தமிழகத்தில் ஆண்டு தோறும் இயற்கை சீற்றங்களால் விவசாயிகள் மகசூல் இழப்பை சந்திப்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனைக் கருத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட பயிர் காப்பீடு திட்டம் தொடர்ந்து ஊழல் முறைகேடுகளில் ஈடுபடுவதற்கு வழி வகுக்கிறது. தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் வருவாயை மட்டுமே நோக்கமாக கொண்டு செயல்படுவதால் இழப்புக்கு ஏற்ப விவசாயிகள் இழப்பீடு பெற முடியாமல் ஆண்டுதோறும் போராடி வருகிறார்கள். எனவே, தமிழக அரசே தமிழகத்திற்கு தனி காப்பீடு திட்டத்தை உடனடியாக செயல்படுத்திட வேண்டும்.

கடந்த 2021-ம் ஆண்டு சம்பா பயிர் காப்பீடு செய்த விவசாயிகளுக்கு இதுவரையிலும் இழப்பீடு குறித்த அறிவிப்புகள் வெளியிடப்படவில்லை, எனவே உடனடியாக இழப்பீட்டுத் தொகை வழங்குவதற்கான நடவடிக்கையை தமிழக அரசு விரைவுபடுத்த வேண்டும்.

கடந்த ஆண்டு குறுவை காப்பீடு செய்ய முடியவில்லை.இந்த ஆண்டும் காப்பீடு செய்வதற்கான அறிவிப்புகள் இதுவரை வெளிவரவில்லை. இதனால் விவசாயிகள் மிகுந்த அச்சத்திற்கு தள்ளப்பட்டுள்ளனர். தமிழக முதலமைச்சர் இது குறித்து உடனடியாக அறிவிப்புகளை வெளியிட வேண்டும்.

உற்பத்தியைப் பெருக்குவதற்கும், வேலை ஆட்கள் பற்றாக்குறை போக்குவதற்கும் வேளாண் இயந்திரங்களை அரசுகள் மானியத்தில் வழங்கிவரும் நிலையில், அதற்கு ஜிஎஸ்டி வரி விதிப்பதால் விவசாயிகள் மட்டுமின்றி அரசுக்கும் நிதிச்சுமை ஏற்படுகிறது. இதனைக் கருத்தில் கொண்டு வரி விதிப்பையும், உயர்வையும் கைவிட மத்திய - மாநில அரசுகள் முன்வர வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓஎன்ஜிசி பேரழிவுத் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்வதற்கு இஸ்மாயில் தலைமையில் அமைக்கப்பட்ட ஆய்வு குழு விவசாயிகளிடம் வெளிப்படையாக கருத்து கேட்காமலேயே அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

இதனால் ஓஎன்ஜிசியுடைய பாதிப்புகள் குறித்து முழுமையாக தீர்வு காணுவதற்கான வாய்ப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது. பாதிப்புகள் தொடர்ந்த வண்ணம் உள்ளது. எனவே, இஸ்மாயில் குழு இறுதி அறிக்கை சமர்ப்பித்துள்ளதை நிறுத்தி வைத்து, மீண்டும் உடனடியாக மாவட்டங்கள் தோறும் சுற்றுப்பயணம் செய்து வெளிப்படையாக கருத்துக் கேட்பு கூட்டங்களை நடத்தி, பாதிப்புகள் குறித்து கண்டறிந்து அதற்கான தீர்வுகளுக்கான முன்மொழிவுகளை அரசுக்கு அளிக்க உரிய நடவடிக்கைகளை முதலமைச்சர் மேற்கொள்ள வேண்டும்.

தமிழகத்தில் கூட்டுறவு வங்கிகள் வலிமையாக உள்ளது. விவசாயிகளுக்கு கூட்டுறவு கடன் வழங்குவதற்கான இலக்கீடுகளை மேற்கொள்ளும் போது நிலப்பரப்பின் அடிப்படையில் கடன் தொகையை இலக்கீடாக நிர்ணயம் செய்ய வேண்டும். அதன் மூலம் ஊழல் முறைகேடு இன்றி சாகுபடியில் ஈடுபடுகிற அனைவருக்கும் உரிய கடன் தொகையை வழங்கிட தமிழக முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று பி.ஆர்.பாண்டியன் தெரிவித்தார்.

x