பள்ளிகளுக்கு அனுப்பப்பட்ட திடீர் சுற்றறிக்கை: ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பம்


தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவுகள் இனி மேற்கொள்ளப்படாது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனால் ஆசிரியர்கள், மாணவர்கள் குழப்பமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் 10, 12-ம் வகுப்பு முடித்த மாணவர்கள் தங்கள் கல்வித் தகுதிகளைப் படித்த பள்ளிகள் மூலம் நேரடியாக வேலைவாய்ப்புத் துறை இணையதளத்தில் பதிவு செய்ய வசதி 2011-ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது. கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு அலுவலக பதிவுசெய்து அனைத்து மாணவர்களுக்கும் ஒரே பதிவு மூப்பு எண் வழங்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில் நடப்பாண்டு 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி 3 வாரங்கள் கடந்துவிட்ட (ஜூன் 20)நிலையில் பள்ளிகளில் வேலைவாய்ப்பு பதிவு செய்தல் குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் பள்ளிக்கல்வி ஆணையரகம் சார்பில் வெளியிடப்படவில்லை. மறுபுறம் இந்த ஆண்டு முதல் பள்ளிகளில் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுசார்ந்து ஈரோடு உட்படசில மாவட்டங்களில் உள்ள வேலைவாய்ப்பு அலுவலங்கள் சார்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையும் அனுப்பப்பட்டுஉள்ளதாக கூறப்படுகிறது. அதில்,10, 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை அவரவர் படித்த பள்ளிகளிலேயே பதிவு செய்யும் நடைமுறை கைவிடப்படுகிறது. மதிப்பெண் சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு நேரில்வந்து பதிவு செய்துகொள்ள வேண்டும்.

மேலும், வேலைவாய்ப்பு இணையதளத்தில் (www.tnvelaivaaaippu.gov.in) நேரடியாகவோ அல்லது இ- சேவை மையங்கள் மூலமாகவோ மாணவர்கள் பதிவு செய்யலாம் என்று தகவல்கள் இடம்பெற்றுள்ளன. இதனால் பள்ளிகள் தலைமை ஆசிரியர்கள், மாணவர்கள் மத்தியில் குழப்பம் நிலவுகிறது. இதுசார்ந்து தெளிவான அறிவிப்பை கல்வித்துறை வெளியிட வேண்டும் எனவும் ஆசிரியர்கள் கோரிக்கைகள் வைத்துள்ளனர்.

x