அவரின் கொள்கைகள் பிடிக்கவில்லை… அதனால் சுட்டுக் கொன்றேன்: ஜப்பான் முன்னாள் பிரதமரை கொலை செய்த முன்னாள் கடற்படை வீரர் வாக்குமூலம்


ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபேவின் கொள்கைகள் பிடிக்காதால் அவரைச் சுட்டுக் கொலை செய்ததாக கொலையாளியான முன்னாள் கடற்படை வீரர் வாக்குமூலம் அளித்துள்ளார்.

ஜப்பான் தலைநகர் டோக்கியோவிலிருந்து 371 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நரா நகரில் நேற்று தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர் ஷின்ஸோ அபே இளைஞரால் சுடப்பட்டார். அவரைச் சுட்ட முதல் குண்டு குறி தவறியதாகவும், இரண்டாவது குண்டு ஷின்ஸோ மீது பாய்ந்ததாகவும் விசாரணையில் தெரிய வந்தது. இதில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷின்ஸோ சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரைக் கொலை செய்ததாக கைது செய்யப்பட்டுள்ள நரா நகரைச் சேர்ந்த டெட்ஸுயா யமாகாமி ஜப்பானிய கடற்படையின் தற்காப்பு படையில் பணியாற்றி விலகியவர். அவர் ஏன் ஷின்ஸோவை கொலை செய்தேன் என்று வாக்குமூலம் அளித்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில்,” ஷின்ஸோ அபேவை சுட்டுக்கொன்ற பிறகு டெட்ஸுயா யமாகாமி தப்பி ஓட முயற்சிக்கவில்லை. அவர் ஜப்பான் கடற்படையில் தற்காப்பு பிரிவில் 3 ஆண்டுகள் பணியாற்றியுள்ளார். ஷின்ஸோ அபேவின் கொள்கைகள் காரணமாக அவர் மீது மிகுந்த அதிருப்தியில் இருந்ததாகவும், அதனால் அவரை தனது சொந்த துப்பாக்கியால் சுட்டுக்கொன்றதாகவும் யமாகாமி வாக்குமூலம் அளித்துள்ளார்” என்றனர்.

x