போலி பிறப்பு சான்றிதழ் தயாரிப்பு... 3 லட்சம் வரை குழந்தைகள் விற்பனை: பெற்றோர்களை குறிவைத்த கும்பல் சிக்கியது!


குழந்தை

தென்காசி மாவட்டத்தில் போலி பிறப்பு சான்றிதழை அரசு முத்திரையுடன் தயாரித்து, குழந்தைகளை விற்பனை செய்துவந்த கும்பலை போலீஸார் கைது செய்தனர்.

தென்காசி மாவட்டம், வி.கே.புதூர் ராஜகோபாலபேரி அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் கதிரேசன்(32). இதேபோல் சுரண்டை அருகில் உள்ள அருணாச்சலபுரத்தைச் சேர்ந்த பால்ராஜ் மனைவி ஜானகி(49) ஆகியோர் அரசு முத்திரையுடன் போலியாகப் பிறப்புச் சான்றிதழ் தயாரித்துக் கொடுப்பதாக போலீஸாருக்குத் தகவல் வந்தது. கூடவே இதற்கு ஒரு லட்சம் ரூபாய்வரைக் கட்டணமும் நிர்ணயித்து வசூல் செய்துள்ளனர். இவர்கள் இருவரையும் போலீஸார் ஏற்கெனவே கைது செய்தனர்.

இவ்வழக்கில் இவர்கள் கொடுத்தத் தகவலின் அடிப்படையில், , சாம்பவர் வடகரையைச் சேர்ந்த பொன்னுத்தாய் (75), கவிதா, அதேபகுதியைச் சேர்ந்த முருகன் என்ற ராமசாமி (45), குலையநேரியைச் சரவணன் (37) ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். இவர்களிடம் நடத்திய தொடர் விசாரணையில், இந்தக் கும்பல், சிலப் பெற்றோர்களிடம் லாவகமாகப் பேசி, அவர்களின் குழந்தைகளை வாங்கி, 3 லட்சம் ரூபாய் வரை வெளியூர்களில் குழந்தை இல்லாத தம்பதிகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதில் சுரண்டையைச் சேர்ந்த ஒருவயது குழந்தை, சேர்ந்தமரம் பகுதியைச் சேர்ந்த எட்டுமாதக் குழந்தை ஆகியோரையும் விற்றது தெரியவந்தது. அந்தக் குழந்தைகளை மீட்ட போலீஸார் அந்தக் கும்பலிடம் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

x