கையில் வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு, தங்களின் ரிலாக்ஸிற்காக கவுதாரி வேட்டையாடிய பொறியாளர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளது.
தூத்துக்குடி இ.வி.சாலை பகுதியைச் சேர்ந்த முருகனும், ’பி அண்ட் டி’ காலனியைச் சேர்ந்த அசோக் ஆகிய இருவரும் நண்பர்கள். கட்டுமானப் பொறியாளர்களான இவர்கள் இருவரும் அவர்களுக்கு ரிலாக்ஸ்டாக இருக்க வேண்டும் எனத் தோன்றும் போதெல்லாம் வேட்டைத் துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பறவைகளை சுடச் செல்வதை வழக்கமாக வைத்திருந்தனர்.
இந்நிலையில், இவர்கள் இன்று அதிகாலையில் குளத்தூர் அரசன்குளம் காட்டுப்பகுதி வழியே கவுதாரியை வேட்டையாடி வருவதாகப் போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. உடனே குளத்தூர் போலீஸார் விரைந்து சென்றனர். அப்போது முருகன், அசோக் இருவரும் வேட்டையாடிவிட்டு காரில் வந்து கொண்டிருந்தனர். அவர்கள் இருவரிடம் இருந்தும் இரண்டு துப்பாக்கிகள், 7 கவுதாரிப் பறவைகள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. விளாத்திகுளம் வனச்சரக அலுவலகத்தில் அவை ஒப்படைக்கப்பட்டதுடன் இருவருக்கும் தலா 25 ஆயிரம் ரூபாய் வீதம், 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.