கலை, அறிவியல், பொறியியல் கலந்தாய்வு : சிபிஎஸ்சி மாணவர்கள் விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு


சிபிஎஸ்சி மாணவர்கள் கலை, அறிவியல் மற்றும் பொறியியல் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்க, தேர்வு முடிவு வெளியான பின் 5 நாட்கள் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிக்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி செய்தியாளர்களிடம் இன்று கூறுகையில், “ அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான கலந்தாய்வு நேற்று (ஜூலை 7) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது, பொறியியல் கலந்தாய்வுக்கு 17-ம் கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சிபிஎஸ்சி தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகுமென தெரியாத நிலையில், தேர்வு முடிவுகள் வெளியான பின் 5 நாட்கள் வரை விண்ணப்பிக்க கால அவகாசம் வழங்கப்படும்.

இந்த ஆண்டு அரசு கலை கல்லூரிகளில் கூடுதலாக 15 சதவீத மாணவர்கள் கல்லூரிகளில் சேர்த்துக் கொள்ளப்படுவார்கள். மாணவிகளுக்கான ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்திற்கு இதுவரை 2 லட்சத்து 20 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர். கல்லூரிகள் திறந்த ஒரு மாதத்தில் மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்” என தெரிவித்தார்.

மேலும்” பொறியியல் கல்லூரிகளின் தரம் குறித்து அண்ணா பல்கலைக்கழக ஆய்வு குழு ஆய்வு செய்து வருவதாகவும், அனைத்து மாணவர்களுக்கும் கல்லூரியில் இடம் கிடைப்பதற்கான அதிகபட்ச முயற்சிகள் மேற்கொள்ளப்படும்” என அவர் கூறினார்.

x