வருமானத்திற்கு அதிகமாக 58 கோடி ரூபாய் சொத்து குவிப்பு: முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 6 பேர் மீது பாய்ந்தது வழக்கு


அதிமுக ஆட்சியின் போது உணவுத்துறை அமைச்சராக இருந்த காமராஜ் மற்றும் அவருக்கு தொடர்புடைய 49 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார், இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். சென்னையில் பனையூர், அடையாறு, மைலாப்பூர், போயஸ் கார்டன்,நீலாங்கரை உட்பட 6 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

கடந்த 2015-2021 -ம் ஆண்டு பதவி வகித்த போது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்திருப்பதாக முன்னாள் காமராஜ், அவரது மகன்கள் இனியன், இன்பன் மற்றும் அவரது நண்பர்கள் சந்திரசேகரன், உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட ஆறு பேர் மீது திருவாரூர் லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குபதிவு செய்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் அமைச்சர் காமராஜ் தான் முறைகேடாக சம்பாதித்த பணத்தை அவரது நண்பர்கள் உதயகுமார், கிருஷ்ணமூர்த்தி மற்றும் சந்திரசேகர் மூலமாக சொத்துக்களை வாங்கி குவித்திருப்பது லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 2007-ம் ஆண்டு சட்டவிரோதமாக அவரது நண்பர்கள் மூலமாக தஞ்சாவூரில் உள்ள என்ஏஆர்சி ஹோட்டல் பிரைவேட் லிமிடெட் என்ற சொத்துக்களை வாங்கி கட்டுமான தொழில் செய்த வருமானத்தை மறைத்ததும் விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதே போல தனது மகன்கள் நடத்தும் வாசுதேச பெருமாள் ஹெல்த் கேர் என்ற நிறுவனத்தை முறைகேடாக வாங்கி நடத்தி வருவதும் லஞ்சஒழிப்பு போலீஸார் கண்டுபிடித்துள்ளனர். சுமார் 27கோடியே 25லட்சத்து 8350 ரூபாய் வரை முறைகேடாக சம்பாதித்த பணத்தை வைத்து காமராஜ் சொத்துக்கள் குவித்துள்ளதாக லஞ்ச ஒழிப்பு துறை தெரிவித்துள்ளது.

கடந்த 2015-ம் ஆண்டு காமராஜ் குடும்பத்தினர் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் இருந்த சொத்துகளின் மதிப்பு ஒரு கோடியே 39 லட்சத்து 54 ஆயிரத்து 290 ரூபாய். ஆனால் 2021-ம் ஆண்டு முடிவில் 60 கோடியே 24லட்சத்து 50 ஆயிரத்து 39 ரூபாய் சொத்துக்கள் உயர்ந்திருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2015-ம் ஆண்டு முதல் 2021-ம் ஆண்டு வரை இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் காமராஜ் உட்பட 6 பேரின் வருமானம் 12 கோடியே 99 லட்சமாக இருந்துள்ளதாகவும், செலவு செய்த தொகை 12கோடியே 59 லட்ச ரூபாய் என லஞ்ச ஒழிப்புத்துறை தெரிவித்துள்ளது. இதன் மூலம் முன்னாள் அமைச்சர் காமராஜ் மற்றும் அவரது நண்பர்கள் பெயரில் வருமானத்திற்கு அதிகமாக 58. 85 கோடி ரூபாய் சொத்துகள் குவித்திருப்பதாக லஞ்ச ஒழிப்பு போலீஸார் தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே முன்னாள் அதிமுக அமைச்சர்களான எம்.ஆர் விஜயபாஸ்கர், சி.விஜயபாஸ்கர்,எஸ்.பி வேலுமணி, தங்கமணி, கே.சி வீரமணி ஆகியோருக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு சோதனை நடத்திய நிலையில் இன்று முன்னாள் அமைச்சர் காமராஜ் தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

x