பாலியல் வன்கொடுமை வழக்கில் திடீர் திருப்பம்… புகார் கொடுத்த பெண், 3 வக்கீல்கள் கைது: பின்னணியில் நடந்தது என்ன?


ஆக்ராவில் பாலியல் பலாத்காரம் செய்ததாக புகார் கொடுத்து வாலிபரிடம் பணம் பறித்த பெண், 3 வழக்கறிஞர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ராவில் வாலிபர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜூன் 26-ம் தேதி புகார் செய்யப்பட்டது. இந்த வழக்கில் திடீர் திருப்பமாக பணத்திற்காக வாலிபரை மிரட்டி பணம் பறிக்க இந்த வழக்கு ஜோடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதைடுத்து பலாத்கார வழக்குப்பதிவு செய்து பணம் பறித்த பெண் மற்றும் மூன்று வழக்கறிஞர்களை போலீஸார் இன்று கைது செய்தனர்.

இதுகுறித்து ஆக்ரா மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விகாஸ் குமார் கூறுகையில்," ஆக்ராவைச் சேர்ந்த வாலிபர் மீது ஜூன் 26-ம் தேதி பலாத்கார வழக்குப் பதிவு செய்யப்பட்டது. விசாரணையில், இது பாலியல் வன்கொடுமை வழக்கு அல்ல எனத் தெரிய வந்தது. வாலிபரை மிரட்டி பணம் பறித்த வழக்கு என்பதை நிரூபிக்கும் ஆதாரங்கள் கிடைத்தன. இந்த குற்றச்சாட்டில் இருதரப்பைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் ஈடுபட்டது கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து போலி புகார் அளித்த பெண் மற்றும் மூன்று வழக்கறிஞர்கள் ரூ. 3.75 லட்சம் பணத்துடன் கைது செய்யப்பட்டுள்ளனர்" என்று தெரிவித்தார். இந்த விசாரணையின் போது, ​​ஒரு பெண் வழக்கறிஞர் உட்பட மேலும் இரண்டு வழக்கறிஞர்களின் பெயர்களும் இணை குற்றவாளிகளாக தெரிய வந்துள்ளது. அவர்களைத் தேடும் பணியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

x