மதுரையிலிருந்து விருதுநகர் நோக்கி குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் சென்று கொண்டிருந்தபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த பெரிய அளவிலான இரும்பு துண்டால் ரயில் சேதமடைந்தது.
சென்னையிலிருந்து கேரள மாநிலம் குருவாயூருக்கு நாள்தோறும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. அதன்படி, நேற்று மாலை மதுரை வந்தடைந்த ரயில், விருதுநகர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அப்போது, திருமங்கலம் அருகே உள்ள கள்ளிக்குடி பகுதியைக் கடக்கும் போது ரயிலில் இருந்து திடீரென பயங்கர சத்தம் கேட்டுள்ளது.
இதனால், அதிர்ச்சி அடைந்த லோக்கோ பைலட் ரயிலை உடனடியாக நிறுத்தினார். மேலும், கீழே இறங்கி ரயிலை முற்றிலுமாக ஆய்வு செய்தார். சத்தம் வந்த பெட்டியின் பகுதியில் பார்த்த போது, ரயில் தண்டவாளத்தில் பெரிய இரும்பு துண்டு ஒன்று வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.
ரயில் இரும்பு துண்டு மீது மோதியதில் தண்டவாளத்தில் உள்ள நான்கு ஸ்லீப்பர் கட்டைகளும், ரயில் பெட்டியின் பக்கவாட்டில் உள்ள படிக்கட்டும் உடைந்து சேதமடைந்தது. இது குறித்து, லோக்கோ பைலட் விருதுநகர் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், இரும்புத் துண்டுகளை சேகரித்து, தண்டவாளப் பகுதியில் வேறு ஏதேனும் உள்ளதா என்று சோதனை நடத்தினர். பின்னர், ஒரு மணி நேரம் ஆய்வு செய்த பின் குருவாயூர் எக்ஸ்பிரஸ் சம்பவ இடத்திலிருந்து புறப்பட்டுச் சென்றது. தொடர்ந்து, கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் படிக்கட்டுகள் சரி செய்யப்பட்ட பிறகு 90 நிமிடங்கள் தாமதமாக ரயில் புறப்பட்டுச் சென்றது.
தண்டவாளத்தில் இவ்வளவு பெரிய இரும்புத் துண்டை வைத்தது யார்? என்ன நோக்கத்திற்காக வைத்தனர்? ரயிலை கவிழ்க்கும் நோக்கத்தில் யாரேனும் வைத்துள்ளனர்? என்றும் விபத்து நடைபெற்ற இடத்திற்கு அருகில் டாஸ்மாக் உள்ளதால், அங்கு மதுவை வாங்கிவிட்டு, தண்டவாளத்தில் அமர்ந்து மது அருந்திவிட்டு, போதையில் யாரேனும் இச்செயலை செய்தார்களா? என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.