`நீட் எக்ஸாம்ல ஸ்கோர் செய்ய முடியாது; என்னை மன்னிச்சுடுமா'- உருக்கமாகக் கடிதம் எழுதிவிட்டு உயிரை மாய்த்த மாணவர்!


நீட் தேர்வில் வெற்றி பெற முடியாததால் மனமுடைந்த மாணவர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் கிருஷ்ணகிரி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரைச் சேர்ந்த கோபி என்பவரது மகன் முரளி கிருஷ்ணா. இவர் கடந்த ஆண்டு 12-ம் வகுப்பு படித்து முடித்துள்ளார். அதனைத் தொடர்ந்து கடந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வையும் எழுதி இருக்கிறார். அந்த தேர்வில் மருத்துவம் படிப்பதற்கு போதுமான மதிப்பெண்களை எடுக்க முடியாத நிலையில், இந்த ஆண்டு நடைபெறும் நீட் தேர்விற்காகத் தன்னை தயார் செய்து வந்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை தனது அறைக்குச் சென்ற முரளி கிருஷ்ணா, கதவைப் பூட்டிக் கொண்டு உள்ளே இருந்துள்ளார். நீண்ட நேரமாகியும் அவர் வெளியே வராததால், சந்தேகமடைந்த அவரது பெற்றோர் அறையின் கதவைத் திறந்து பார்த்தனர். அப்போது, அவர் தூக்கில் தொங்கிய நிலையில் இருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளனர். உடனடியாக முரளி கிருஷ்ணாவை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர்.

அவரது உடலைப் பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கெனவே உயிரிழந்து விட்டதாகத் தெரிவித்தனர். இந்த சம்பவம் குறித்து ஓசூர் சிப்காட் போலீஸார் நடத்திய விசாரணையில், மாணவர் தனது கைப்பட எழுதிய கடிதம் ஒன்று கிடைத்துள்ளது. அந்த கடிதத்தில், ``எனக்கு நீட் எக்ஸாம் ரொம்ப கஷ்டமா இருக்கு. என்னால நீட் தேர்வுல நல்ல ஸ்கோர் செய்ய முடியாது. என்னை மன்னிச்சுரும்மா. நான் என்னால முடிஞ்ச அளவு முயற்சி செய்தேன். ஆனால் என்னால மெடிக்கல் சீட்டு வாங்குற அளவுக்கு ஸ்கோர் செய்ய முடியாது. நான் உன்னை ரொம்ப மிஸ் பண்றேன்மா” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். நீட் தேர்வு காரணமாகத் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவங்கள் தொடர்வது அனைவரையும் கவலைக்குள்ளாக்கி இருக்கிறது.

x