பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை என 3 ஆண்டுகளாக தனக்கு வழங்கப்பட்ட 24 லட்ச ரூபாய் சம்பளத்தை கல்லூரி பேராசிரியர் திரும்ப வழங்கியுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிஹார் மாநிலம், முசாபர்பூரில் உள்ள நிதிஷேஸ்வர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இக்கல்லூரி 1970-ல் சுதந்திரப் போராட்ட வீரர் நிதிஷேஸ்வர் பிரசாத் சிங்கால் நிறுவப்பட்டது. இந்த கல்லூரியில் இந்தி உதவிப் பேராசிரியராக பணியாற்றுபவர் லாலன் குமார்( 33). இந்த கல்லூரி பி.ஆர்.அம்பேத்கர் பீகார் பல்கலைக்கழகத்தின் (பிராபு) கீழ் செயல்பட்டு வருகிறது.
கடந்த 2019 செப்டம்பர் மாதம் பணியில் சேர்ந்ததில் இருந்து தனக்கு வழங்கப்பட்ட 23,82,228 ரூபாயை பி.ஆர். அம்பேத்கர் பிஹார் பல்கலைக்கழக பதிவாளரிடம் லாலன் குமார் வழங்கினார்.
இதுகுறித்து லாலன் குமார் கூறுகையில், “ பாடம் எதுவும் எடுக்காமல் சம்பளம் வாங்க என் மனசாட்சி அனுமதிக்கவில்லை. ஆன்லைன் வகுப்புகளின் போது கூட (கரோனா காலத்தில்) இந்தி வகுப்புகளுக்கு ஒரு சில மாணவர்கள் மட்டுமே வந்தனர். ஐந்து வருடங்கள் கற்பிக்காமல் சம்பளம் வாங்கினால் எனது கல்வி மரணமடைந்ததற்கு சமமாகும்” எனக் கூறினார்.
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இந்தியில் முதுகலை மற்றும் டெல்லி பல்கலைக்கழகத்தில் பிஎச்டி மற்றும் எம்பில் முடித்த லாலன் குமார், கல்வித்துறையில் முதுகலை துறைக்கு இடமாற்றம் செய்ய விண்ணப்பித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.