கடலூர் மாவட்டம், திட்டக்குடி அருகே பள்ளிப்பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் அதன் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். அதில் பயணித்த பள்ளி மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.
திட்டக்குடி அருகே பாசார் பகுதியில் சத்திய சாய் என்ற பெயரில் தனியார் பள்ளி இயங்கி வருகிறது. அருகில் உள்ள கிராமங்களில் இருந்து மாணவர்களை அழைத்துச் செல்ல பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது. அதன்படி பெருமுளை, சிறுமுளை, ஆதனூர், கிரிவலம் உள்ளிட்ட கிராமங்களைச் சேர்ந்த மாணவர்களை அழைத்துக்கொண்டு 18-ம் எண் கொண்ட பேருந்து இன்று காலை பள்ளிக்கு வந்து கொண்டிருந்தது.
10, 11, மற்றும் 12 -ம் வகுப்புகளில் படிக்கும் 30க்கும் மேற்பட்ட மாணவர்கள் இருந்தனர். கனகம்பாடி அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பள்ளிப்பேருந்து அருகில் இருந்த வயல் பகுதியில் கவிழ்ந்தது. இதில் பேருந்தின் ஓட்டுநர் படுகாயம் அடைந்தார். பேருந்து கவிழ்ந்ததைக் கண்ட அப்பகுதி மக்கள் ஓடி வந்து அனைவரையும் பேருந்தில் இருந்து பாதுகாப்பாக மீட்டனர்.
இதில் மாணவர்கள் லேசான காயங்களுடன் அனைவரும் உயிர் தப்பினர். படுகாயமடைந்த பேருந்து ஓட்டுநர் ஆம்புலன்ஸ் மூலம் திட்டக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். பள்ளி பேருந்து கவிழ்ந்த செய்தியை கேள்விப்பட்ட பெற்றோர்கள் பதறி அடித்து ஓடி வந்தனர். மாணவர்களுக்கு பெரிய காயங்கள் இல்லாத நிலையில் அவர்கள் தங்கள் குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீடு திரும்பினர். பள்ளி பேருந்து கவிழ்ந்த சம்பவம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.