கூட்டுறவு வங்கியில் 8.4 கிலோ தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைத்து மோசடி: நிர்வாகக்குழுவை கலைத்து அதிரடி


திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி நகர கூட்டுறவு வங்கியின் ஊழியர்களால் 8. 4 கிலோ அளவிற்கு தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைத்து 2.30 கோடி ரூபாய் மோசடி நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டுறவு வங்கியில் அடகு வைக்கப்படும் ஐந்து சவரன் வகையிலான நகைக்கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று திமுக அறிவித்திருந்தது. அதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள கூட்டுறவு வங்கிகளில் ஏராளமான மக்கள் தங்கள் நகைகளை அடகு வைத்து கூட்டுறவு கடன் பெற்றனர்.

அதில் முறைகேடாக பல இடங்களில் முறைகேடுகள் நடந்திருப்பது பின்னர் கண்டறியப்பட்டது. வங்கியின் உறுப்பினர்கள், தலைவர், செயலாளர் உள்ளிட்டவர்களேபெருமளவு மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. அதனையடுத்து சுமார் 40 லட்சம் பேர் கடன் பெற்றிருந்த நிலையில் சுமார் 15 லட்சம் பேருக்கு மட்டுமே கடன் தள்ளுபடி செய்யப்பட்டது.

மோசடி நடந்த வங்கிகள் கண்டறியப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி தற்போது ஆரணி நகர கூட்டுறவு வங்கியில் சுமார் 8.4 கிலோ அளவிற்கு தங்க முலாம் பூசிய நகைகள் அடகு வைக்கப்பட்டு 2.30 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. ஆரணி நகர கூட்டுறவு வங்கி ஆரணியில் தேவிகாபுரம் சாலையில் இயங்கி வருகிறது. இங்கு நகை மதிப்பீட்டாளர் மோகன் என்பவர் இந்த மோசடியில் ஈடுபட்டிருப்பது தெரியவந்துள்ளது.

அதனையடுத்து அவரையும், அவருக்கு உடந்தையாக இருந்த மேலாளர் உள்ளிட்ட நான்கு பேர்களையும் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த கூட்டுறவு சங்கத்தின் நிர்வாகக் குழுவையும் கலைத்து கூட்டுறவு சங்கங்களின் இணை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

x