ஆவணப்பட இயக்குநருக்கு கொலை மிரட்டல்: 'அதிரடி' சரஸ்வதி கோவையில் கைது


'அதிரடி' சரஸ்வதி

ஆவணப்பட இயக்குநர் லீனா மணிமேகலைக்கு கொலைமிரட்டல் விடுத்து வீடியோ வெளியிட்ட சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க அமைப்பின் தலைவர் 'அதிரடி' சரஸ்வதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கவிஞர் லீனா மணிமேகலை ஆவணப்படங்களையும் இயக்கி வருகிறார். இவர் இயக்கிய 'மாடத்தி, 'செங்கடல்' போன்ற படங்கள் பல்வேறு பட விழாக்களில் திரையிடப்பட்டுள்ளன. இதற்காக சில விருதுகளையும் அவர் பெற்றுள்ளார். இந்நிலையில், அவர் 'காளி' என்ற நிகழ்த்துகலை ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இதில் அவரே ’காளி’யாகவும் நடித்துள்ளார்.

இந்தப் படத்தின் 'பர்ஸ்ட் லுக்' போஸ்டரை தனது சமூக வலைதளப் பக்கத்தில் அவர் பதிவிட்டிருந்தார். அதில் 'காளி' வேடம் அணிந்த பெண் புகைப்பிடித்துக்கொண்டு எல்ஜிபிடி (LGBT) கொடியை கையில் பிடித்திருக்கிறார்.

இந்த போஸ்டர் இந்து கடவுளை அவமதிக்கும் வகையில் இருப்பதாகக் கூறி பலரும் உடனடியாக எதிர்ப்பு தெரிவித்தனர். லீனா மணிமேகலையை கைது செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் வினீத் ஜிண்டால் என்ற வழக்கறிஞர் கொடுத்த புகாரின் பேரில், லீலா மணிமேகலை மீது டெல்லி, உத்தரபிரதேச மாநில போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த நிலையில் சஷ்டி சேனா இந்து மக்கள் இயக்க அமைப்பின் தலைவர் 'அதிரடி' சரஸ்வதி ஆவணப் பட இயக்குநர் லீனா மேகலைக்கு கொலை மிரட்டல் விடுத்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதையடுத்து கோவை செல்வபுரம் போலீஸார்,' அதிரடி' சரஸ்வதியை கைது செய்துள்ளனர்.

x