முதல்வரின் அதிரடி ஆய்வு… அமைச்சரின் அடுக்கடுக்கான உத்தரவு: சீர் செய்யப்படும் சிறுவர் இல்லங்கள்!


தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 30-ம் தேதி இராணிப்பேட்டையில் நடைபெறும் மாவட்ட அரசு விழாவிற்குக் கலந்து கொள்ளச் சென்றார். அப்போது அவர் போகும் வழியில் கூட்ரோட்டில் உள்ள சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் உள்ள சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் சிறுவர்களுக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்திற்குச் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். மேலும், பணியில் இல்லாத ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

முதல்வரின் அறிவுரையைத் தொடர்ந்து சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், அடுத்த நாளே ராணிப்பேட்டை சிறுவருக்கான அரசினர் குழந்தைகள் இல்லத்தில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது சமையலறைக்குச் சென்ற அமைச்சர், மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரத்தை உண்டு பார்த்து, மாணவர்களுக்கு வழங்கப்படும் தினசரி உணவு அட்டவணையைச் சோதனை செய்தார். வாரம் ஐந்து நாட்களும் மாணவர்களுக்கு மதிய உணவோடு முட்டை வழங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் அதே வளாகத்தில் செயல்பட்டு வரும் இராணிப்பேட்டை மாவட்டத்திற்கான மாவட்ட குழந்தைகள் நலக்குழு மற்றும் அரசினர் வரவேற்பு இல்லம் ஆகியவற்றையும் அமைச்சர் பார்வையிட்டார்.

முதல்வர் ஸ்டாலின் அறிவுரையின்படி சமூகப் பாதுகாப்புத்துறையின் கீழ் இயங்கும் குழந்தைகள் இல்லங்கள், கூர்நோக்கு இல்லங்கள், சிறப்பு இல்லங்கள், பாதுகாப்பு இல்லங்கள், பிற்காப்பு நிறுவனங்கள் ஆகிய இல்லங்களில் தங்கியுள்ள குழந்தைகளின் கல்வி, உணவு, சீருடை, தங்கும் அறைகள் மற்றும் பிற வசதிகள் ஆகியவற்றை இயக்குநரகத்தில் உள்ள அலுவலர்கள் உடனே ஆய்வு செய்து, அதன் அறிக்கையை இயக்குநருக்கு ஜூலை 6-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க உத்தரவிட்டார். மேலும், இந்த இல்லங்களில் தங்கியுள்ள மாணவர்கள் மற்றும் சிறுவர்கள் அனைவருக்கும் முதல்வர் ஸ்டாலினின் அறிவுரைப்படி கட்டில், பெட்ஷீட் வழங்கிடவும் உரிய கருத்துருக்களைச் சமர்ப்பிக்க அமைச்சர் கீதாஜீவன் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு ஆய்வறிக்கை சமர்ப்பித்துள்ளனர். இந்த அறிக்கைகளில் அடிப்படையில் சமூகப் பாதுகாப்புத் துறையின் கீழ் இயங்கும் அனைத்து இல்லங்களிலும் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் நியமனம் சிறுவர்களின் எதிர்கால நலனுக்காகச் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து ஒரு விரிவான அறிக்கை தயார் செய்யப்பட்டு முதல்வர் ஸ்டாலினிடம் வழங்கப்பட்டுள்ளது.. மேலும் முதல்வர் ஆலோசனை மற்றும் அனுமதியைப் பெற்று மறு சீரமைப்புகள் முழு அளவில் செய்யப்படும் எனத் தலைமைச் செயலக வட்டாரத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

x