திருவிழாக்கோலம் பூண்டது திருவட்டாறு: 418 ஆண்டுகளுக்குப் பின்பு நடந்த ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்!


திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகம் இன்று காலையில் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு ‘ஓம் நமோ நாராயணாய’ என விண்ணதிர கோஷமிட்டனர்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறில் ஆதிகேசவப் பெருமாள் கோயில் உள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றான இந்த ஆலயம் குறித்து, நம்மாழ்வார் 11 பாசுரங்கள் பாடியுள்ளார். இந்த ஆலயத்தில் 418 ஆண்டுகளுக்குப் பின்பு இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. பாரம்பரிய பெருமைமிக்க ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

கோயிலுக்கு வரும் பக்தர்களின் வசதிக்காக நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், திருவனந்தபுரம் என முக்கிய நகரங்களில் இருந்து திருவட்டாறுக்கு சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இன்று காலையில் நடைபெற்ற கும்பாபிஷேகத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆகியோர் உள்பட பலரும் கலந்துகொண்டனர்.

ஆதிகேசவப் பெருமாள் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு ஆலயம் முழுவதும் மின்னொளியில் ஜொலித்தது. திருவட்டாறு முழுவதுமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

x