திங்கள்கிழமை காலை 5.42 மணி முதல் இப்போதுவரை அந்தமானில் 20க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. இந்த நிலநடுக்கங்கள் ரிக்டர் அளவுகோலில் 3.8 முதல் 5.0 வரை பதிவாகியுள்ளன என தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று காலை 8.05 மணியளவில் போர்ட் பிளேரின் தென்கிழக்கு கடற்கரையிலிருந்து 187 கி.மீ தொலைவில் 4.3 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. போர்ட் பிளேயருக்கு கிழக்கு- தென்கிழக்கே 215 கி.மீ தொலைவில் காலை 5.57 மணிக்கு ஏற்பட்ட 5.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இவற்றில் மிகப்பெரியது. ஆனால் நிலநடுக்கங்களால் ஏற்பட்ட சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை தகவல் இல்லை.
இந்த 22 நிலநடுக்கங்களில் இன்று மட்டும் 11 நிலநடுக்கங்கள் பதிவாகியுள்ளன. அதிகாலை 12.03 மணி முதல் காலை 8.05 மணி வரை தொடர்ந்து நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதுபோல தொடர் நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் கடந்த சில நாட்களாகவே கர்நாடகாவில் பதிவாகியுள்ளன. சமீபத்தில் சனிக்கிழமை மதியம் 1.25 மணியளவில் விஜயநகருக்கு அருகே 2.1 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவானது. அசாமில் இன்று காலை 11.03 மணியளவில் 3.7 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.