‘இதுபோன்ற பழிவாங்கும் குணம் கொண்ட அரசைப் பார்த்ததே இல்லை’ - மோடி அரசைச் சாடிய மம்தா பானர்ஜி


தேசிய அளவில் பாஜகவை மிகக் கடுமையாக எதிர்த்து நிற்கும் தலைவர்களில் பிரதானமாகக் கருதப்படுபவர் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி. 2024 மக்களவைத் தேர்தலில் மோடியை எதிர்கொள்ள எதிர்க்கட்சிகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டுவரும் மம்தா, அவ்வப்போது மோடி அரசை மிகக் கடுமையாக விமர்சிப்பது உண்டு.

அந்த வகையில், ‘இந்தியா டுடே’ செய்தி ஊடகம் சார்பில் நடந்துவரும் கிழக்கு மாநாடு (‘இந்தியா டுடே கான்க்ளேவ் ஈஸ்ட்’) நிகழ்ச்சியின் முதல் நாளான நேற்று, மூத்த ஊடகவியலாளர் ராஜ்தீப் சர்தேசாய் எழுப்பிய கேள்விகளுக்கு மம்தா பானர்ஜி பதிலளித்தார். அப்போது, “எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியா எனும் சூழலுக்குள் நாம் நுழைந்துகொண்டிருப்பதாகச் சிலர் கருதுகிறார்கள். மகாராஷ்டிரத்தில் உத்தவ் தாக்கரே அரசை பாஜக வெற்றிகரமாக வீழ்த்திவிட்டது. உத்தர பிரதேசம் போன்ற மிக முக்கியமான மாநிலத்தின் சட்டப்பேரவைத் தேர்தலில் வென்று மீண்டும் ஆட்சியமைத்துவிட்டது. 2024 மக்களவைத் தேர்தல் நெருங்கிக்கொண்டிருக்கும் சூழலில், நாம் உண்மையிலேயே எதிர்க்கட்சிகள் இல்லாத இந்தியாவுக்குள் நுழைந்துகொண்டிருக்கிறோமா?” என மம்தாவிடம் ராஜ்தீப் கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளித்த மம்தா, “நான் பல அரசுகளைப் பார்த்திருக்கிறேன். நரசிம்ம ராவ், ராஜீவ் காந்தி, தேவகவுடா, வாஜ்பாய், மன்மோகன் சிங் ஆகிய பிரதமர்களுடன் நான் பணிபுரிந்திருக்கிறேன். நிலக்கரிச் சுரங்கத் துறை, மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை, ரயில்வே துறை மற்றும் பல துறைகளில் மத்திய அமைச்சராகப் பதவிவகித்திருக்கிறேன். ஆனால், இதுபோன்ற பழிவாங்கும் குணம் கொண்ட அரசை நான் பார்த்ததே இல்லை” என்றார்.

“மகாராஷ்டிரத்தில் (ஆட்சியைப் பிடிக்க) அவர்கள் எந்த அளவுக்கு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தினார்கள்! மக்களால் பெரும்பான்மை அளிக்கப்பட்டு தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு இருக்கும்போது, பாஜகவுக்கு என்ன அவசரம் வந்தது? தேர்ந்தெடுக்கப்பட்ட ஓர் அரசு பண பலம், அதிகார பலம், அமலாக்கத் துறை மூலம், சிபிஐ வீழ்த்தப்படுகிறது. என்ன செய்யவில்லை இவர்கள்?” என்று ஆவேசத்துடன் கூறினார்.

மேலும், “இந்த (மகாராஷ்டிர) அரசு நீடிக்கும் என நான் நினைக்கவில்லை. இது அறமற்ற அரசு, ஜனநாயகமற்ற அரசு, சட்டவிரோத அரசு” என்று சாடிய மம்தா, “அவர்கள் அரசை வென்றெடுத்திருக்கலாம். ஆனால், அவர்கள் மராத்திய மக்களின் மனதை வென்றெடுக்கவில்லை. இதற்கு பின்னாட்களில் பதில் தர வேண்டியிருக்கும்” என்றார்.

“ஆனால், 2019 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்துத்தானே சிவசேனா போட்டியிட்டது? தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடனும் காங்கிரஸுடனும் கைகோத்து சிவசேனா ஆட்சியமைத்தது” என்று ராஜ்தீப் மீண்டும் கேள்வி எழுப்பியதும், “கடந்த கால வரலாற்றைப் பற்றி இப்போது விவாதிக்க வேண்டியதில்லை. இப்போது நடக்கும் விஷயங்கள் குறித்துதான் பேச வேண்டும். இல்லையென்றால் வேறு பல விஷயங்கள் குறித்தும் பேச வேண்டியிருக்கும்” என்று பதிலளித்த மம்தா, “உள் துறை அமைச்சர் (அமித் ஷா) ஏன், ’வலுக்கட்டாயமாக ஓர் அரசைக் கைப்பற்றிவிட்டோம். நாளை நான் ஆந்திர பிரதேசம், மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாட்டுக்குச் செல்வேன்’ என்கிறார். நீங்கள் எல்லாவற்றையும் கைப்பற்றலாம். ஆனால், நாடு உங்களைக் கைப்பற்றும். எதிர்காலத்தில் நாடு உங்களுக்கு சரியான பதிலடியைக் கொடுக்கும். நீங்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தி மக்கள் மீது புல்டோசரை ஏற்றலாம். ஜனநாயகத்தின் மீது புல்டோசரை ஏற்றலாம். ஆனால், அடுத்த தேர்தல் பாஜகவுக்கும், மக்களுக்கும் இடையிலானதாக இருக்கும். மக்கல் உங்கள் மீது புல்டோசர் ஏற்றுவார்கள்” என்றார்.

திங்கள் கிழமை தொடங்கியிருக்கும் இந்நிகழ்ச்சியின் இரண்டாவது நாளான இன்று திரிணமூல் காங்கிரஸ் எம்.பி மஹுவா மொய்த்ரா, அசாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா, மேற்கு வங்க ஆளுநர் ஜக்தீப் தன்கர் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

x