பிரதமர் பதவியில் இருந்து விலகத் தயார்: ரணில் விக்ரமசிங்கே பரபரப்பு அறிவிப்பு


இலங்கையின் பிரதமர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என ரணில் விக்ரமசிங்கே நாடாளுமன்றத்தில் இன்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் நாடாளுமன்றத்தில் பேசுகையில், “பிரதமர் பதவியை வழங்குங்கள். இன்றும் 6 மாதங்களில் நாட்டை பழைய நிலைக்குக் கொண்டு வருவதாக மக்கள் விடுதலை முன்னணி தலைவர் அனுர குமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். அவ்வாறு முடியுமென்றால் அந்த திட்டத்தை வரவேற்கின்றோம்” என்று விக்ரமசிங்கே கூறினார்.

மேலும் அவர் பேசுகையில்,” அநுர குமார திஸாநாயக்கவின் திட்டம் வெற்றியளிக்கும் என்றால் உடனடியாக பதவியை விலக நான் தயாராக உள்ளேன். மிக மோசமான நிலையில் வீழ்ச்சியடைந்துள்ள ஒரு நாட்டை 6 மாதங்களுக்கு மீண்டும் பழைய நிலைமைக்கு கொண்டுவர அநுர குமாரவிடம் திட்டமிருந்தால் அதற்கு ஒரு நோபல் பரிசு வழங்க முடியும்.

எனவே அந்த திட்டத்தை அதிபரிடம் முன்வைக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். அவரிடம் முன்வைக்க விருப்பமில்லை என்றால் நாடாளுமன்றத்தில் அவர் தெரிவிக்கலாம். எனவே, எங்களை விடவும் சிறந்த வேலைத்திட்டம் உள்ள ஒருவரிடம் நாட்டை வழங்குவதற்கு நான் எதிர்ப்பு தெரிவிக்க மாட்டேன். அநுர குமாரவினால் 6 மாதங்களில் நாட்டை கட்டியெழுப்ப முடியுமென்றால் எனது பதவியை விட்டுக்கொடுத்து ராஜினாமா செய்வதற்கு தயாராக உள்ளேன்” என பிரதமர் ரணில் விக்ரமசிங்கே கூறினார். அவர் அப்படி பேசியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ‘கோ ஹோம் கோத்த' என கூச்சலிட ஆரம்பித்தனர். இதனால் நாடாளுமன்றம் 10 நிமிடங்களுக்குள் ஒத்திவைக்கப்பட்டது.

x