தூத்துக்குடியில் வீசிய சூறைக்காற்றில் பனை மரம் முறிந்து விழுந்து ஒன்றேகால் வயதே ஆன குழந்தை உயிரிழந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடியில் கடந்த மூன்று நாள்களாக சூறைக்காற்று வீசிவருகிறது. இதனால் ஆங்காங்கே சேதங்களும் ஏற்பட்டு வருகின்றன.
தூத்துக்குடி கே.வி.கே நகரைச் சேர்ந்த இசக்கியப்பன் ஓட்டுனராக உள்ளார். இவரது மகள் முத்துபவானிக்கு ஒன்றேகால் வயது ஆகிறது. குழந்தை முத்துபவானி நேற்று இரவு தன் வீட்டின் முன்பே தெருவில் விளையாடிக் கொண்டிருந்தாள். அப்போது வீட்டின் முன்பே நின்ற பனை மரம் ஒன்று வீசிய சூறைக்காற்றில் பாதியில் முறிந்து விழுந்தது. பனை மரம் முறிந்து முத்துபவானி மேல் விழுந்ததில் சம்பவ இடத்திலேயே குழந்தை பலியானது. இதுகுறித்துத் தகவல் தெரிந்ததும், தூத்துக்குடி மத்திய பாகம் போலீஸார் முத்துபவானியின் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன் உள்ளிட்டோர் இன்றுகாலை நேரில்போய் குழந்தையின் பெற்றோருக்கு ஆறுதல் தெரிவித்தனர். குழந்தையை இழந்த பெற்றோரின் அழுகையும், வேதனையும் அப்பகுதிமக்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.