‘வேலைகள் விற்பனைக்கு...’ - கர்நாடக பாஜக அரசுக்கு ராகுல் காந்தி கண்டனம்


கர்நாடகத்தில் காவல் உதவி ஆய்வாளர்கள் நியமன மோசடி குறித்து கண்டனம் தெரிவித்திருக்கும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, இது பாஜகவின் அவமானகரமான ஊழல் என்று சாடியிருக்கிறார். மேலும் இதுகுறித்து நேர்மையான விசாரணை நடைபெறுவதை உறுதிசெய்யும் வகையில் முதல்வர் பசவராஜ் பொம்மை பதவிவிலக வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியிருக்கிறார். கர்நாடகத்தில் வேலைகள் விற்கப்படுவதால் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவு தகர்க்கப்பட்டுவிட்டதாகவும் அவர் குற்றம்சாட்டியிருக்கிறார்.

“தனது ஆட்சியில் ஊழலை அனுமதிப்பதில்லை என்று மோடி அடிக்கடி கூறுகிறார். ‘ந காவூங்கா, ந கானே தூங்கா’ (நானும் சாப்பிட(ஊழல் செய்ய) மாட்டேன், மற்றவர்களையும் சாப்பிட (ஊழல் செய்ய) விட மாட்டேன்’ என்று முழங்கிவரும் மோடி, ஏன் பசவராஜ் பொம்மை மீது நடவடிக்கை எடுக்கவில்லை?” என்று ட்விட்டரில் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியிருக்கிறார்.

“பசவராஜ் பொம்மை பதவிவிலகினால் அல்லது பதவிநீக்கம் செய்யப்பட்டால் மட்டும்தான் இதுகுறித்து நியாயமான விசாரணை சாத்தியமாகும். இளைஞர்கள் நீதிக்காகக் காத்திருக்கிறார்கள்” என்று காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரண்தீப் சிங் சுர்ஜேவாலா தெரிவித்திருக்கிறார்.

கர்நாடக மாநிலத்தில் 545 காவல் துறை உதவி ஆய்வாளர்களைத் தேர்வு செய்ய 2021 அக்டோபரில் நடந்த தேர்வில் 54,041 பேர் கலந்துகொண்டனர். 2022 ஜனவரியில் தேர்வு முடிவுகள் வெளியான நிலையில், இதில் முறைகேடு நடந்திருப்பதாக, தேர்வு எழுதிய சிலர் புகார் தெரிவித்தனர். தேர்வு முடிவுகளை மறுமதிப்பீடு செய்ய வேண்டும் என டிஜிபி அலுவலகத்துக்குக் கடிதம் அனுப்பப்பட்டது. ஆனால், எந்த முறைகேடும் நடக்கவில்லை என காவல் துறை உயரதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதே கருத்தைக் கர்நாடக உள் துறை அமைச்சர் அரகா ஞானேந்திராவும் சட்டப்பேரவையிலும் தெரிவித்தார்.

எனினும், 40 பேர் ஓஎம்ஆர் விடைத்தாளில் மோசடி செய்து அதிக மதிப்பெண் வாங்கியது அம்பலமானது. பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த விவகாரத்தில் காவல் துறை தேர்வாணையத்தின் தலைவராக இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரியான அம்ரித் பால், ஏப்ரல் மாதம் இடைநீக்கம் செய்யப்பட்டார். நேற்று அவர் கைது செய்யப்பட்டார். இது தொடர்பாக சிஐடி போலீஸார் தீவிர விசாரணை நடத்திவருகின்றனர். இவ்விஷயத்தில் சிஐடி போலீஸாருக்கு முழுச் சுதந்திரம் அளித்திருப்பதாக முதல்வர் பசவராஜ் பொம்மை தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

x