இளைஞர்களைத் தவறான செயலுக்கு உட்படுத்துகிறார்: பைக் ரைடர் டிடிஎஃப் வாசன் மீது ஆணையர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்


டிடிஎஃப் வாசன் சூப்பர் பைக்குகளில் பயணம் செய்து பல்வேறு வீடியோக்களை தனது யூடியூப் சேனல் மூலம் வெளியிட்டு வருகிறார். இதனால் இவரை 28 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பின்தொடர்ந்து வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு டிடிஎஃப் வாசன் தனது பிறந்த நாளை முன்னிட்டு ரசிகர்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கட்டுக்கடங்காத கூட்டம் கூடியதால் காவல்துறையால் சமாளிக்க முடியாத சூழல் ஏற்பட்டது. இதனையடுத்து டிடிஎஃப் வாசனை போலீஸார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சந்தித்த அந்த நிகழ்வை டிடிஎஃப் வாசன் வீடியோவாக தனது யூடியூப் சேனலில் பதிவிட்டுள்ளார்.
அப்போது யார் இந்த டிடிஎஃப் வாசன், ஏன் ஆயிரக்கணக்கானோர் இவரை பின் தொடர்கின்றனர் என்று பலரும் வலைதளத்தில் தேட ஆரம்பித்தனர். இதனையடுத்து இவரது யூடியூப் வீடியோக்கள் பல கருத்து மோதல்களை ஏற்படுத்தியது. இந்நிலையில் டிடிஎஃப் வாசன் சூப்பர் பைக்குகளைப் பயன்படுத்தி அதி வேகமாக செல்லும் காட்சி ஒன்றை வீடியோவாக தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். சுமார் 247 கிலோமீட்டர் வேகத்தில் இருசக்கர வாகனத்தை இயக்கும் அந்த வீடியோவை டேக் செய்து பலரும் குற்றம் சாட்டி வருகின்றனர்.

மேலும் சென்னை காவல் துறையில் சமூக வலைதளப் பக்கத்தை இணைத்து டிடிஎஃப் வாசன் பைக்கில் அதிவேகமாக செல்லும் வீடியோவையும் இணைத்து புகார் அளித்து வருகின்றனர். இது போன்ற வீடியோ பதிவினால் இளைஞர்கள் தவறான முன்னுதாரணமாக எடுத்துக்கொண்டு அதிவேகமாக பைக் ஓட்டுவார்கள் என்ற கருத்தையும் பதிவிட்டுள்ளனர்.

பைக்கில் அதிவேகமாக செல்லும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தையும் இணைத்து புகார் அளித்துள்ளனர்.

எனவே, டிடிஎஃப் வாசனையும் இவரை பின்பற்றி இதே போன்று அதிவேகமாக பைக்குகளை இயக்கி வீடியோ பதிவிடும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்குமாறு சென்னை காவல்துறை சமூக வலைதள பக்கத்திலும்,தமிழக காவல்துறை பக்கத்திலும், புகார் அளித்து வருகின்றனர்.

இதற்கு பதில் அளித்துள்ள காவல்துறை சென்னை காவல்துறை, இதுபோன்ற செயல்களை சென்னை மாநகரத்தில் அனுமதிக்க மாட்டோம் என தெரிவித்துள்ளனர். மாணவர்களும், இளைஞர்களும் இதுபோன்ற ஆபத்தான செயல்களில் ஈடுபட வேண்டாம் என சென்னை காவல்துறை சமூக வலைதளப் பக்கத்தில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதில் நீங்களும், உங்கள் பாதுகாப்பும் முக்கியம் என்றும் இந்த சம்பவம் நிகழ்ந்த பகுதி சென்னை காவல்துறைக்கு உட்பட்டது அல்ல எனவும் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட பகுதி காவல்துறையினரிடம் உரிய நடவடிக்கை எடுக்க தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் சென்னை காவல்துறை சமூக வலைதளத்தின் மூலம் பதில் அளித்துள்ளது. டிடிஎஃப் வாசன் யூடியூப்பர் இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக மாறிவிடக்கூடாது என சமூக வலைதளம் மூலம் பலரும் குற்றச்சாட்டுகளைத் தெரிவித்து வருகின்றனர்.
இந்த குற்றசாட்டுகளுக்கு பதிலளித்து வாசன் மற்றொரு வீடியோவை பதிவிட்டுள்ளார். அதில்," கடந்த சில ஆண்டுகளாக நான் பைக் ரைடராக பயிற்சி பெற்று அதிவேக பைக்குகளை ஓட்டி வருகிறேன். பைக் ஓட்டும் போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நெறிமுறைகளை முறையாக பின்பற்றி பைக் ஓட்டுகிறேன். மேலே குறிப்பிட்டது போல் நான் 247 கிலோமீட்டர் வேகத்தில் பைக் ஓட்டி சென்றது உண்மை தான். ஆனால் அது தமிழ்நாட்டில் ஓட்டவில்லை. அண்டை மாநிலத்தில் உள்ள விரைவு நெடுஞ்சாலையில் ஓட்டியது. மேலும் எனது நண்பர்களை ஒரு போதும் தவறான பாதைக்கு அழைத்து செல்லமாட்டேன். கடந்த சில நாட்களாக என்னைப் பற்றி வதந்தி மற்றும் கருத்து மோதல்கள் அதிகரித்து வருகிறது. எது வந்தாலும் பார்த்து கொள்ளலாம்" என தனது வீடியோ பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

x