திருட்டுப் பைக்கில் கொள்ளையடிக்க வந்த சிறுவர்கள்... ஸ்கெட்ச் போட்டு தூக்கியது போலீஸ்: நெல்லையில் இரவில் அதிரடி


பெட்ரோல் பங்கில் கொள்ளையடிக்கும் நோக்கத்தோடு, திருட்டு பைக்கில் வந்த சிறுவர்களை போலீஸார் கைது செய்தனர்.

திருநெல்வேலி வண்ணாரப்பேட்டைப் பகுதியில் நேற்று இரவு போலீஸார் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தெற்கு புறவழிச்சாலையில் இரு மோட்டார் சைக்கிளில் 5 சிறுவர்கள் வந்தனர். அவர்களுக்கு நிச்சயமாக லைசன்ஸ் இருக்காது என முடிவு செய்த போலீஸார் அவர்களது வாகனத்தை நிறுத்தினர். உடனே அந்தச் சிறுவர்கள் பைக்கை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பியோடினர். பின் தொடர்ந்து விரட்டிச் சென்ற போலீஸார் அவர்களில் இருவரை விரட்டிப் பிடித்தனர்.

போலீஸார் அந்த இருவரிடமும் நடத்திய விசாரணையில் அவர்கள் அனைவருமே 16 வயதே ஆனவர்கள் எனத் தெரிய வந்தது. மைனர் குற்றவாளிகள் என்பதால் போலீஸார் அவர்களின் விவரங்களை அறிவிக்கவில்லை. இந்த ஐந்து பேர் கொண்ட கும்பல் சேரன்மகாதேவியில் இருந்து இருசக்கர வாகனத்தைத் திருடி அதில் வந்தது தெரியவந்தது. டவுண் நயினார்குளம் பகுதியில் இந்த கும்பல் பெட்போல் பங்க் ஒன்றில் புகுந்து கொள்ளையடிக்க முயன்றது. ஆனால் அங்கு ஜனநடமாட்டம் அதிகம் இருந்ததால் வேறு பெட்ரோல் பங்கை நோக்கி நகர்ந்தபோது போலீஸ் பிடியில் சிக்கியதும் தெரியவந்தது.

கைதான சிறுவர்களிடம் இருந்து இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு அரிவாள் ஆகியவையும் பறிமுதல் செய்யப்பட்டது. தப்பியோடிய மூவரையும் பிடிக்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

x