திரையரங்கம் முன்பு அதன் ஊழியர்கள் மற்றும் இளைஞர்கள் ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டதால் திரைப்படம் பார்க்க வந்த பொதுமக்கள் அலறி அடித்துக் கொண்டு ஓடிய சிசிடிவி காட்சி சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் ரவுண்ட் ரோடு பகுதியில் அமைந்துள்ளது ராஜேந்திரா திரையரங்கம். இங்கு, கமல் நடிப்பில் வெளியாகி உள்ள 'விக்ரம்' திரைப்படம் ஓடிக்கொண்டுள்ளது. நேற்று, ஞாயிற்றுக்கிழமை என்பதால் திரையரங்கில் சற்று கூட்டம் அதிகமாக காணப்பட்டது. இந்நிலையில், திரைப்படத்தைக் காண வந்த ஒரு சில இளைஞர்கள் குடிபோதையில் வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், திரையரங்க ஊழியர்கள் இளைஞர்களை தடுத்து நிறுத்தி உள்ளனர். இதனால், இளைஞர்களுக்கும், ஊழியர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் கைகளப்பாக மாறியது. திரையரங்கு முன்பு ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். திரைப்படம் பார்ப்பதற்காக வந்த பொதுமக்கள் இதை கண்டதும் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனடியாக அங்கிருந்த சில ஊழியர்களையும், இளைஞர்களையும் சமாதானப்படுத்தி பிரித்து விட்டதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் திரையரங்கு ஊழியர்கள் மீதும் குடிபோதையில் வந்த இளைஞர்கள் மீதும் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திரையரங்கு முன்பு ஒருவரை ஒருவர் பலமாக தாக்கிக் கொண்டதைக் கண்ட பொதுமக்கள் அலறியடித்துக் கொண்டு ஓடிய சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.