பரோல் வழங்கியது நீதிமன்றம்: எம்.பி-யாக பதவியேற்ற இன்ஜினீயர் ரஷீத், அமிர்தபால் சிங்


புதுடெல்லி: பயங்கரவாதம், பிரிவினைவாத நடவடிக்கைகளால் சிறையில் அடைக்கப்பட்ட கைதிகள் இன்ஜினீயர் ரஷீத், அமிர்த பால் சிங் ஆகியோர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற நிலையில் இன்று பரோலில் நாடாளுமன்றத்துக்கு வந்து எம்.பி-யாக பதவி ஏற்றுக் கொண்டனர்.

சமீபத்தில் முடிவடைந்த மக்களவைத் தேர்தலில் ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம், பாரமுல்லா தொகுதியில் இன்ஜினீயர் ரஷீத் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், தேசிய மாநாட்டு கட்சியின் துணைத் தலைவருமான உமர் அப்துல்லாவை இரண்டு லட்சத்துக்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். 56 வயதான ரஷீத், கடந்த 2019ம் ஆண்டில் பயங்கரவாதத்துக்கு நிதியுதவி வழங்கியது தொடர்புடைய பண மோசடி வழக்கின் விசாரணையின் போது தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அமைப்பால் கைது செய்யப்பட்டார். அதன் பின்னர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (யுஏபிஏ) கீழ் டெல்லி திகார் சிறையில் அவர் அடைக்கப்பட்டார்.

மேலும், அவர் சிறையிலிருந்தவாறே மக்களவைத் தேர்தலில் பாரமுல்லா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இதைத் தொடர்ந்து, இன்று அவர் பதவியேற்க, தனக்கு பரோல் வழங்குமாறு பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தை அணுகினார். நீதிமன்றம் வழங்கிய 2 மணி பரோலில், இன்று இன்ஜினீயர் ரஷீத் எம்.பி-யாக பதவி ஏற்றுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில் ரஷீத்தின் மனைவி, மகள், மகன்கள் அஸ்ரார் ரஷீத், அப்ரார் ரஷீத். சகோதரர் குர்ஷித் அகமது ஷேக் உள்ளிட்ட குடும்பத்தினர் கலந்து கொண்டனர். அவரது கட்சி நிர்வாகிகளும் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நீதிமன்ற உத்தரவுகளின்படி ரஷீத், ஊடகங்களுடனோ அல்லது வேறு எந்த நபருடனோ பேச அனுமதிக்கப்படவில்லை. மீண்டும் சிறைக்கு அழைத்துச் செல்லப்படுவதற்கு முன்பு இன்ஜினீயர் ரஷீத், தனது குடும்பத்தினருடன் மட்டும் பேச அனுமதிக்கப்பட்டார்.

இதேபோல் அசாமின் திப்ரூகர் சிறையில் தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (என்எஸ்ஏ) கீழ் கைது செய்து வைக்கப்பட்டுள்ள காலிஸ்தான் சார்பு பிரிவினைவாதியும், மக்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான அமிர்தபால் சிங்கிற்கும் பரோல் வழங்கப்பட்டதால் அவரும் இன்று எம்.பி-யாக பதவியேற்றார். 31 வயதான அமிர்தபால் சிங், பஞ்சாபில் உள்ள கதூர் சாஹிப் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றவராவார்.