வீட்டின் கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள்: 40 பவுன் நகை, ரூ.20 லட்சம் கொள்ளை:


திருச்சியில் நடைபெற்ற உறவினரின் இல்ல திருமண விழாவிற்கு குடும்பத்தினருடன் சென்ற மதுரையைச் சேர்ந்த கேட்டரிங் உரிமையாளரின் வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, 40 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 20 லட்சம் ரொக்கம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.

மதுரை வசந்த நகர் பகுதியைச் சேர்ந்தவர் சீனிவாச சங்கர நாராயணன் (55). சொந்தமாக கேட்டரிங் தொழில் நடத்தி வருகிறார். கடந்த 2-ம் தேதி திருச்சியில் நடைபெற்ற தனது உறவினர் இல்ல திருமண விழாவிற்கு வீட்டை பூட்டிவிட்டு தனது குடும்பத்தினருடன் சென்றார்.

இந்நிலையில், நேற்று இரவு மதுரை திரும்பிய போது, வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாச சங்கர நாராயணன், வீட்டினுள் சென்று பார்த்தார். அங்கு பீரோ மற்றும் அலமாரிகளில் திறக்கப்பட்டு அதில், இருந்த பொருட்கள் கீழே சிதறிக்கிடந்தன.

மேலும் பீரோ லாக்கர் உடைக்கப்பட்டு, அதிலிருந்த 40 பவுன் தங்க நகை, ரூ. 20 லட்சம் ரொக்கம் ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டது தெரிய வந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த சீனிவாச சங்கர நாராயணன், காவல் துறையினருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சுப்பிரமணியபுரம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். மேலும் மோப்பநாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களை தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

இது குறித்து காவல்துறையினர் கூறும்போது, "தனது மகளின் திருமணச் செலவிற்காக நகை மற்றும் பணம் சிறுக சிறுக சேமித்து வைத்துள்ளார். மேலும், கொள்ளை போன நகை, பணத்தின் மொத்த மதிப்பு ரூ. 36 லட்சம் இருக்கும்" என்றனர்.

x