சேனையை வீழ்த்திய தாமரை


பல திருப்பங்கள் கொண்ட பாலிவுட் அரசியல் படங்களையும் விஞ்சும் வகையில் மகாராஷ்டிர அரசியல் களத்தின் காட்சிகள் பரபரப்பாக நடந்து முடிந்திருக்கின்றன. இதுதான் கிளைமாக்ஸா என இறுதிசெய்ய முடியாத அளவுக்கு இன்னும் பல திருப்பங்கள் காத்திருக்கின்றன. மேலவைத் தேர்தலில் கட்சி மாறி வாக்களித்த சிவசேனா எம்எல்ஏ-க்கள் குறித்து கட்சித் தலைமை கேள்வி எழுப்பியதைத் தொடர்ந்து, ஜூன் 20-ல் தொடங்கிய அரசியல் புயல் பத்து நாட்களுக்குள் முடிவுக்கு வந்துவிட்டது. இதில் சேனாவுக்கு ஏற்பட்டிருக்கும் சேதம்தான் தேசம் முழுதும் பேசுபொருளாகியிருக்கிறது.

சிவசேனாவின் சரிவு

கருத்தியல் எதிரிகளான காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடனான மகா விகாஸ் அகாடியிலிருந்து சிவசேனா வெளியேற வேண்டும் என போர்க்கொடி தூக்கிய அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில், பாஜகவின் ஆதரவில் குஜராத்திலும் அசாமிலும் முகாமிட்டதால் மொத்த அரசியல் களமும் மாறிப்போனது. இறுதியில், சித்பவன் பிராமண சமூகத்தைச் சேர்ந்த பாஜகவின் தேவேந்திர ஃபட்னவீஸை மீண்டும் முதல்வராக்காமல் மராத்தா சமூகத்தைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேவை முதல்வராக்கியிருப்பதன் பின்னணியில் பாஜகவின் பிரதான திட்டம் இருக்கிறது. அது - சிவசேனாவைக் கைப்பற்றுவது. உமர் அப்துல்லா சரியாகக் குறிப்பிட்டிருப்பது போல், இனி உத்தவ் தாக்கரேவுக்குப் பெரும் சவால் காத்திருக்கிறது.

ஏக்நாத் ஷிண்டே

சிவசேனாவில் பிளவுகள் புதிதல்ல. ராஜ் தாக்கரே, சகன் புஜ்பால், நாராயண ரானே என முக்கியத் தலைகள் வெளியேறிய பின்னரும் சிவசேனா பெரிய பின்னடைவைச் சந்தித்துவிடவில்லை. இப்போது ஏற்பட்டிருக்கும் பின்னடைவு மிகப் பெரியது. 2012-ல் பால் தாக்கரேயின் மறைவுக்குப் பின்னர் சிவசேனாவின் பலம் சற்றே குறைந்ததும், 2014-க்குப் பின்னர் வலிமை வாய்ந்த இந்துத்துவத் தலைவரான மோடியின் தலைமையில் பாஜகவின் பலம் அதிகரித்ததும் ஏறத்தாழ சமகால நிகழ்வுகள். இன்று வரை மோடியின் செல்வாக்கு அதிகரித்துக் கொண்டே செல்லும் நிலையில், சிவசேனா இப்படி சரிவைச் சந்தித்திருக்கிறது.

இந்துத்துவ சித்தாந்தம்

1966-ல் சிவசேனாவை பால் தாக்கரே தொடங்கியபோது மராத்தியர்களுக்கான உரிமைகள் என இன ரீதியான உணர்வெழுச்சியுடன் தான் அதைக் கட்டமைத்தார். பின்னர்தான் இந்துத்துவாவையும் அக்கட்சி சுவீகரித்துக்கொண்டது. பாபர் மசூதி இடிப்பில் சிவசேனா முன்னின்றது. 1989-ல் நடந்த மக்களவை மற்றும் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலின்போது பாஜகவும் சிவசேனாவும் முதன்முதலாகக் கூட்டணி அமைத்தன.

இந்துத்துவக் கொள்கை கொண்ட கட்சிகள் என்றாலும் பாஜகவுக்கும் , சிவசேனாவுக்கும் இடையில் அவ்வப்போது புகைச்சல் எழும். 2019 சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் வெளியான பின்னர் அது உச்சமடைந்தது. சுழற்சி முறையில் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வது என்று மக்களவைத் தேர்தலின்போதே முடிவுசெய்யப்பட்டுவிட்டதாகச் சொன்ன உத்தவ் தாக்கரே, பேச்சுவார்த்தையில் அமித் ஷாவும் ஃபட்னவிஸும் உடன் இருந்ததாகச் சொன்னார். பாஜக அதை மறுக்க, கூட்டணியிலிருந்து வெளியேறி மகா விகாஸ் கூட்டணியை அமைத்து ஆட்சியைக் கைப்பற்றியது சிவசேனா. இதற்கிடையே அஜித் பவாருடன் கைகோத்து முதல்வராக ஃபட்னவீஸ் பதவியேற்றுக்கொண்டார் என்றாலும், பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் 80 மணி நேரத்திலேயே ராஜினாமா செய்தார்.

2019-ல் பாஜகவை சிவசேனா ஏமாற்றிவிட்டது; அதற்கான பதிலடிதான் இது என்று இன்றைக்குப் பேசுபவர்கள் சிவசேனாவைப் பயன்படுத்தி மகாராஷ்டிராவில் பாஜக வளர்ந்த விதம் குறித்தும், ஒரு கட்டத்தில் சிவசேனாவைவிட அதிக இடங்களில் போட்டியிட பாஜக முடிவெடுத்ததால்தான் இரு தரப்புக்கும் இடையில் விரிசல் எழுந்தது என்பது குறித்தும் ஏனோ பேசுவதில்லை. உண்மையில், 2019-ல் பாஜகவுக்கு எதிராக அப்படி ஒரு முடிவை எடுக்காமல் விட்டிருந்தால், சிவசேனா முன்பே கலகலத்துப் போயிருக்கும் என்றும் சிலர் சுட்டிக்காட்டுகிறார்கள்.

அதிருப்தியைப் பயன்படுத்திக்கொண்ட பாஜக

உண்மையில் சிவசேனா தலைமை பாஜகவுக்கு எதிராக இயங்கி வந்தாலும், தீவிர இந்துத்துவக் கொள்கை கொண்ட பாஜகதான் தங்கள் இயல்பான கூட்டணி என்றே கட்சித் தொண்டர்களும் இரண்டாம் கட்டத் தலைவர்கள் பலரும் கருதினர். சாவர்க்கர் குறித்த ராகுல் காந்தியின் கடும் விமர்சனம், இந்துத்துவக் கட்சியான சிவசேனாவின் தொண்டர்களைக் கையறு நிலைக்குத் தள்ளியது. அனுமன் சாலிஸா தொடங்கி பல்வேறு பிரச்சினைகளில் இந்துத்துவக் கொள்கையை ஒதுக்கிவைத்துவிட்டு உத்தவ் தாக்கரே அரசு செயல்பட்டது. உத்தவ் தாக்கரே, அவரது மகன் ஆதித்யா தாக்கரே ஆகியோர் இந்துத்துவக் கொள்கையைவிடவும், அனைத்துத் தரப்பினரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்பதை நோக்கமாகக் கொண்டு இயங்கிவந்தனர். இதெல்லாம் இந்துத்துவர்கள் மத்தியில் சிவசேனாவுக்குப் பின்னடைவைத் தந்தது.

இன்னொரு புறம், என்னதான் மத்திய ஆளுங்கட்சி என்றாலும், நாட்டின் பொருளாதாரத் தலைநகராகக் கருதப்படும் மும்பை நகரைக் கொண்ட மாநிலத்தை மீண்டும் ஆளும் வாய்ப்பு கைநழுவியது பாஜகவுக்கு உறுத்தலாகவே இருந்துவந்தது. இந்தச் சூழலில் சிவசேனாவுக்குள் நிலவிய கசப்புணர்வைக் கச்சிதமாக அக்கட்சி பயன்படுத்திக்கொண்டது. ஏற்கெனவே மகா விகாஸ் அகாடி கூட்டணி கலகலத்துக் கிடந்தது. வன்முறையில் ஈடுபட்டதாக ஏக்நாத் ஷிண்டே மீதும் வழக்குகள் உண்டு. அவருக்கு ஆதரவளித்த இருபதுக்கும் மேற்பட்ட எம்எல்ஏ-க்கள் மீதும் வழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது.

சங்கடம் தந்த சஞ்சய் ராவத்

இதனிடையே, சிவசேனாவின் அதிகாரபூர்வ நாளிதழான ‘சாம்னா’வின் நிர்வாக ஆசிரியரும். மாநிலங்களவை எம்பி-யுமான சஞ்சய் ராவத் உதிர்த்த வார்த்தைகள் பிரச்சினையைப் பூதாரமாக்கின. “எந்தப் பள்ளியில் நீங்கள் படிக்கிறீர்களோ, அந்தப் பள்ளியின் ஹெட்மாஸ்டர் நாங்கள்தான்” என்று நாடாளுமன்றத்தில் அமித் ஷாவைப் பார்த்து கர்ஜித்தவர் அவர்.

பத்திரிகையாளராகப் பணிபுரிந்த காலத்தில் பால் தாக்கரேயைச் சந்தித்த சஞ்சய் ராவத், பின்னர் சிவசேனாவில் இணைந்தார். ராஜ் தாக்கரே மூலம் அவருக்கு நெருக்கமானார். 1988-ல் ‘சாம்னா’ தொடங்கப்பட்டது. அதன் ஆசிரியராக இருந்த அசோக் பட்பேத்ரி ஓய்வுபெற்றதைத் தொடர்ந்து 1991-ல் நிர்வாக ஆசிரியர் பதவி சஞ்சய் ராவத்துக்குக் கிடைத்தது. பால் தாக்கரே சொல்லும் குறிப்புகளை வைத்து தலையங்கம், கட்டுரைகள் எழுதிவந்த சஞ்சய் ராவத், ஒருகட்டத்தில் பால் தாக்கரேயின் சிந்தனையை முழுமையாக உள்வாங்கி சிறப்பாக வெளிப்படுத்திவந்தார். இன்றுவரை சிவசேனாவின் கருத்து என ’சாம்னா’வில் வெளிவரும் பெரும்பாலான கருத்துகள் சஞ்சய் ராவத் எழுதியவை என்பதால், பாஜகவுடனான பகைக்கு அவரே ஆதார சுருதியாகப் பார்க்கப்படுகிறார்.

சஞ்சய் ராவத்

இந்துத்துவக் கொள்கையைப் பறைசாற்ற, முஸ்லிம்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய வரலாறும் சஞ்சய் ராவத்துக்கு உண்டு. ஆனாலும், பாஜகவைத்தான் பல ஆண்டுகளாக அவர் தாக்கிப் பேசியும் எழுதியும் வந்தார். சவால் விடும் பாணியிலேயே பேசிப் பழக்கப்பட்ட சஞ்சய் ராவத், அதிருப்தி எம்எல்ஏ-க்கள் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் திரண்டு உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க்கொடி தூக்கியபோது மேலும் ஆவேசம் காட்டினார். “லட்சக்கணக்கான சிவசேனைகள் காத்திருக்கிறார்கள். நாங்கள் கண்ணசைத்தால் போதும்” என்றும் அதிருப்தியாளர்களுக்குப் பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அதிருப்தி எம்எல்ஏ-க்களை நடைபிணங்கள் என அவர் விமர்சித்தது அவர்களைக் கொந்தளிக்கச் செய்தது.

ஒருபக்கம் கோபம் இருந்தாலும், ‘திரும்பி வாருங்கள், பேசித் தீர்க்கலாம்’ என்று அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு உத்தவ் தாக்கரே உருக்கமாகக் கடிதம் எழுதிக்கொண்டிருக்க, மறுபக்கம் சஞ்சய் ராவத் இப்படி சகட்டுமேனிக்கும் பேசிவந்தது சமாதானத்துக்கு வழியே இல்லாமல் செய்துவிட்டது.

பாஜகவின் பலே வியூகம்

இரண்டு முறை முதல்வராக இருந்த தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர் பதவிக்கு ஒப்புக்கொண்டது எப்படி என பலரும் ஆச்சரியப்பட்டனர். உண்மையில், இதை அவரே எதிர்பார்த்திருக்கவில்லை. “நீங்கள் பாஜக பக்கம் செல்கிறீர்கள் சரி, ஆனால் அங்கு உங்களுக்கு முதல்வர் பதவி கிடைக்குமா? கிடைக்கும் என்றால் நானே உங்களை அனுப்பிவைக்கிறேன்” என்று உத்தவ் தாக்கரே கூறியிருந்தார். அவருக்குப் பதில் சவால் விடுவது போல் முதல்வர் பதவியை ஏக்நாத் ஷிண்டேவுக்கு வழங்கியிருக்கிறது பாஜக.

திரிபுரா, மத்திய பிரதேசம், கர்நாடகம் என அடுத்தடுத்து காய்நகர்த்தி எதிர்க்கட்சியினரைத் தங்கள் வசம் ஈர்த்து ஆட்சியைக் கைப்பற்றி வருகிறது பாஜக. இம்முறை அதுகுறித்த விமர்சனங்களைத் தவிர்க்கவே, சிவசேனா கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டேயையே முதல்வராக்க முன்வந்ததது. இதில் இரண்டு லாபங்கள் அக்கட்சிக்குக் கிடைத்திருக்கின்றன. ஒன்று, சிவசேனாவுக்குள் குழப்பத்தை ஏற்படுத்துவது. இரண்டாவது, தங்கள் கட்சியினருக்குப் பதவி மீது ஆசையில்லை; மாநில வளர்ச்சிதான் முக்கியம் எனக் காட்டிக்கொள்வது. பதவி வெறியுடன் பாஜக செயல்படுவதாக உத்தவ் தாக்கரே முன்வைத்த வாதத்தை இதன் மூலம் அக்கட்சி தவிடுபொடியாக்கிவிட்டது. கூடவே, இந்துத்துவா கொள்கையில் உறுதி காட்டாத உத்தவ் தாக்கரேயை நீக்கிவிட்டு, பால் தாக்கரேயின் கொள்கையிலிருந்து வழுவாமல் இருக்கும் ஏக்நாத் ஷிண்டே குழுவினர் ஆட்சிக்கு வர உதவியதாகப் பெருமிதத்துடன் சொல்லிக்கொள்கிறார்கள் பாஜகவினர்.

ராஜினாமா செய்வதற்கு முன்னர் உத்தவ் தாக்கரேயின் கடைசி உத்தரவு அவுரங்காபாத் நகரின் பெயரை சம்பாஜிநகர் என்றும், உஸ்மானாபாத் எனும் பெயரை தாராஷிவ் என்று மாற்றியதுதான். ஆட்சியின் கடைசித் தருணத்தில் முஸ்லிம்களின் அடையாளங்களை அழிக்கும் உத்தரவைப் பிறப்பித்தது ஏன் என்று சிறுபான்மையினர் கேள்வி எழுப்புகிறார்கள். இந்துத்துவக் கொள்கையிலிருந்து விலகவில்லை எனக் காட்டுவதற்காக இதைச் செய்தாரா என்று அவர்கள் ஆதங்கப்படுகிறார்கள். இது இந்துத்துவா விஷயத்தில் அவரது உச்சகட்டத் தடுமாற்றத்தையும் பதற்றத்தையும் காட்டுகிறது.

இந்நிகழ்வுகளின் விளைவாக உத்தவ் தாக்கரே தரப்புக்குக் கட்சிக்குள்ளும் மக்கள் மத்தியிலும் அனுதாபம் கிடைக்குமா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ராஜினாமா செய்வதற்கு முன்னர் சட்டப்பேரவையில் உத்தவ் உருக்கமாக ஒரு உரையை நிகழ்த்தியிருக்க வேண்டும் என்று பலரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

களையிழந்த கட்சி

இனி யார் உண்மையான சிவசேனா எனும் கேள்வி பிரதானமாக எழுந்திருக்கிறது. அமைப்பு ரீதியாகவும் குழப்பங்கள் நீடிக்கும். இயல்பாகவே ஷாகா, விபாக் பொறுப்புகளில் இருப்பவர்கள், அமைப்பு ரீதியாக ‘சிவசேனா பிரமுக்’ (தலைவர்) பதவியில் உள்ள உத்தவ் தாக்கரே பக்கம்தான் நின்றாக வேண்டும். ஆனால், அரசியல் ரீதியாகப் பார்த்தால் சட்டப்பேரவை உறுப்பினர்களுக்காக அவர்கள் செயல்பட்டாக வேண்டியிருக்கும். ரொம்பவே சிக்கலான இந்த நெருக்கடியில் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் சோர்வடைந்திருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. மும்பை திரும்பும் அதிருப்தி எம்எல்ஏ-க்களுக்கு எதிராகப் போராட வேண்டாம் என்று உத்தவ் தாக்கரே கேட்டுக்கொண்டதால் யாரும் வீதியில் இறங்கவில்லை. ஆனால், பழைய உத்வேகம் இருந்திருந்தால் தலைவர் பேச்சையும் கேட்காமல் அவர்கள் போராட்டத்தில் குதித்திருப்பார்கள்.

கட்சி சின்னம் ஏக்நாத் ஷிண்டே தரப்பின் கைகளுக்குச் சென்றுவிட்டால் உத்தவ் தாக்கரேவால் அதை மீட்பது எளிதல்ல. அதேசமயம், 39 எம்எல்ஏ-க்களைத் தங்கள் வசம் வைத்திருப்பாலேயே கட்சி ஏக்நாத் ஷிண்டே வசம் சென்றுவிடும் எனச் சொல்ல முடியாது; கட்சியின் நிர்வாகிகள், எம்பி-க்கள் எனப் பலரும் அங்கீகரித்தால் மட்டும்தான் அது நடக்கும். முழு நிலவரத்தையும் தெரிந்துகொண்ட பின்னர்தான் தேர்தல் ஆணையம் இதுகுறித்து முடிவெடுக்கும். அரசியல் பலம், சகல அதிகாரங்களும் கொண்ட பாஜகவின் ஆதரவு என்றெல்லாம் சாதகமான சூழல், ஏக்நாத் ஷிண்டே தரப்புக்கு இருந்தாலும் தார்மிக ரீதியிலான சவால்களும் அவர்களுக்கு உண்டு.

பால் தாக்கரேயின் அபிமானத்தைப் பெற்றவரும், அவர் மீதான மதிப்பை இன்னமும் வெளிக்காட்டிக்கொள்பவருமான ஏக்நாத் ஷிண்டே, பாஜகவை வளர்த்துவிடுவதற்காக சிவசேனாவைப் பலவீனப்படுத்துவது முறையா எனும் கேள்வி முன்வைக்கப்படுகிறது. அதிருப்தியாளர்களில் பலர் முதல்முறை சட்டப்பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள். சிலர் வேறு கட்சிகளிலிருந்து சிவசேனாவுக்கு வந்தவர்கள். எனவே, ஒருமித்த உணர்வு அவர்கள் மத்தியில் எத்தனை நாட்களுக்கு நீடிக்கும் என்பது முக்கியமான கேள்வி.

இலக்குகளும் சவால்களும்

நாட்டிலேயே அதிக வளமிக்க மாநகராட்சியாகக் கருதப்படும் மும்பை மாநகராட்சியைக் கைப்பற்றுவதுதான் பாஜகவின் அடுத்த இலக்கு.

30 வருடங்களுக்கு மேலாக சிவசேனா வசம் இருக்கும் பிருஹன் மும்பை மாநகராட்சியைக் கைப்பற்ற வேண்டும் என பாஜக கங்கணம் கட்டிக்கொண்டு காத்திருக்கிறது. மும்பைக்கு வெளியே பரவலாக எம்எல்ஏ-க்களின் ஆதரவை ஏக்நாத் ஷிண்டே பெற்றிருந்தாலும் மும்பையைப் பொறுத்தவரை உத்தவ் தாக்கரேதான் பலம் வாய்ந்தவர். எனவே, பிருஹன் மும்பை மாநகராட்சித் தேர்தல் ஏக்நாத் - பாஜக தரப்புக்கு அத்தனை எளிதாக இருக்காது.

பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகளின் கூட்டணி இனி பலமாக இருக்குமா எனும் கேள்வியையும் மகாராஷ்டிர அரசியல் நிலவரம் காட்டிவிட்டது. காங்கிரஸ் குறித்த அச்சம் பாஜகவுக்கு எப்போதோ அகன்றுவிட்டது. இன்றைக்கு மாநிலக் கட்சிகளிடமிருந்து எழும் சவால்களையும் எதிர்கொண்டு வென்று காட்ட முடியும் என்றும் அக்கட்சி நிரூபித்துவிட்டது. ஏற்கெனவே மாநிலக் கட்சிகள் வாரிசு அரசியல் செய்பவை எனத் தீவிரப் பிரச்சாரம் செய்துவருகிறார்கள் பாஜகவினர். இந்நிலையில், அரசியல் அனுபவம் இல்லாத ஆதித்யா தாக்கரேவுக்கு அமைச்சர் பதவி வழங்கியதன் மூலம் அந்த விமர்சனத்துக்கு வலு சேர்த்துவிட்டார் உத்தவ் தாக்கரே.

இனி என்ன?

மகாராஷ்டிரத்தைப் பொறுத்தவரை முதல்வராகப் பதவிவகித்தவர்கள், பின்னாட்களில் வெறுமனே அமைச்சர் பொறுப்புகளை மட்டும் வகித்த வரலாறு உண்டு. எனினும், முதல்வர் பதவியை மீண்டும் எதிர்பார்த்திருந்த தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு கட்சித் தலைமை சொன்னதும் சற்றே துணுக்குற்றார் என்கிறார்கள். எனினும், கட்சியின் நலனே பெரிது என்று சொல்லி சமாளித்தார்.

2019-ல் முதல்வர் பதவியை இழந்த பின்னர் கட்சிக்குள் தனது செல்வாக்கை வளர்த்துக்கொண்டிருக்கிறார் ஃபட்னவீஸ். மாநிலங்களவைத் தேர்தல் மற்றும் மேலவைத் தேர்தலில் பாஜகவுக்கு வெற்றி தேடித் தந்திருக்கிறார். ஏக்நாத் ஷிண்டேதான் முதல்வர் என்றதும், ஒருவழியாக அதை ஏற்றுக்கொண்ட ஃபட்னவீஸ் வெளியிலிருந்து ஆதரவு என்றே முதலில் சொன்னார். கட்சித் தலைமை வலியுறுத்திய பின்னரே துணை முதல்வர் பதவியை ஏற்றுக்கொண்டார். ஜே.பி.நட்டா இந்த முடிவை அறிவித்தாலும், அதைத் தீர்மானித்தது அமித் ஷாதான்.

மராத்தாக்களின் ஆதரவைப் பெறுவதில் முனைப்பு காட்டும் பாஜக, ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராக்கியதில் ஆச்சரியமில்லை. ஏற்கெனவே மராத்தா சமூகத்தைச் சேர்ந்த வினோத் தவாடேயை தேசியப் பொதுச் செயலாளராக்கியது கட்சித் தலைமை. இனி மராத்தாக்கள், சித்பவன் பிராமணர்களின் ஆதரவை ஒருசேர திரட்டலாம் என்று பாஜக கணக்குப் போடுகிறது. முதல்வரே ஏக்நாத் ஷிண்டேதான் எனும்போது அவருக்கு இருக்கும் அதிகாரங்கள் வேறு பல கணக்கீடுகளுக்கும் கொண்டு செல்லும். அதையெல்லாம் தாண்டி, முக்கியத் துறைகளைக் கையில் வைத்துக்கொண்டு பாஜக ஆடப்போகும் ஆட்டம் மகாராஷ்டிரத்தைத் தாண்டி இந்தியா முழுவதும் எதிரொலிக்கும் என்று இப்போதே சொல்லிவிடலாம்!

x