‘திட்டம் தோல்வியடைந்தால்... தயாராகக் காத்திருந்த மேலும் இருவர்’ - உதய்ப்பூர் படுகொலை குறித்து என்ஐஏ பகீர் தகவல்


முகமது நபி குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாக சமூகவலைதளத்தில் எழுதிய ராஜஸ்தானைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முக்கியத் தகவலை தேசியப் புலனாய்வு முகமை (என்ஐஏ) வெளியிட்டிருக்கிறது.

இந்தியாவில் நடந்துவரும் மத ரீதியிலான மோதல் குறித்து ஒரு தொலைக்காட்சி விவாதத்தின்போது நபிகள் நாயகம் குறித்து பாஜக செய்தித்தொடர்பாளர் நுபுர் ஷர்மா அவதூறாகப் பேசியதாகப் புகார் எழுந்தது. கடும் எதிர்ப்பு எழுந்த நிலையில், அதற்காக மன்னிப்பு கோரினார். பின்னர் அவர் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். எனினும், அவரைக் கைதுசெய்ய வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள் போராட்டம் நடத்தின.

அத்துடன், நுபுர் ஷர்மாவுக்கு ஆதரவாகக் கருத்து தெரிவித்தவர்களுக்கு மிரட்டல்களும் வந்தன. இந்தச் சூழலில் ராஜஸ்தானின் உதய்ப்பூரைச் சேர்ந்த தையல் கலைஞர் கன்னையா லால், சமூகவலைதளத்தில் நுபுர் ஷர்மாவின் கருத்துக்கு ஆதரவாகப் பதிவிட்டதாகக் கைதுசெய்யப்பட்டு ஜாமீனில் வெளிவந்தார். அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன. ஜூன் 28-ல் அவரது கடைக்குச் சென்ற ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது ஆகிய இருவரும் கழுத்தை அறுத்து அவரைப் படுகொலை செய்தனர்.

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்தச் சம்பவத்தையடுத்து, ரியாஸ் அக்தாரி, கோஸ் முகமது ஆகியோருடன் அவர்களுக்கு உதவியதாக மோஹ்சின், ஆசிஃப் ஆகிய இருவர் கைதுசெய்யப்பட்டனர். இந்த வழக்கு என்ஐஏ வசம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், படுகொலைத் திட்டம் தோல்வியடைந்தால் அதை மீண்டும் செயல்படுத்த மோஹ்சின், ஆசிஃப் இருவரும் தயாராக இருந்ததாக என்ஐஏ இன்று தெரிவித்திருக்கிறது. கன்னையா லால் படுகொலை செய்யப்பட்ட பின்னர் குற்றவாளிகள் தப்பிச் செல்ல இருவரும் உதவியதாகவும் என்ஐஏ அதிகாரிகள் கூறியிருக்கின்றனர்.

இதற்கிடையே வழக்கு விசாரணைக்காக இன்று ஜெய்ப்பூரில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்காக கொண்டுவரப்பட்ட நால்வர் மீதும் அங்கு கூடியிருந்தவர்கள் தாக்குதல் நடத்தினர். எனினும், என்ஐஏ அதிகாரிகள், அந்தக் கும்பலின் தாக்குதலிலிருந்து அவர்களைக் காப்பாற்றி வாகனத்தில் ஏற்றினர். முன்னதாக ஜூலை 12 வரை விசாரணைக்காக என்ஐஏ காவலில் அவர்களை வைத்திருக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

x