வரன் பார்க்க ஆரம்பித்த பெற்றோர்...லாட்ஜ் அறையில் இரண்டு தோழிகள் எடுத்த விபரீத முடிவு!


பள்ளிப் பருவத்திலிருந்து கல்லூரி வரை இணைபிரியாமல் இருந்த தோழிகளில் ஒருவருக்கு, திருமண வரன் பார்க்க பெற்றோர்கள் முடிவு செய்ததால் இருவரும் தற்கொலைக்கு முயற்சி செய்த சம்பவம் மதுரையில் அரங்கேறி உள்ளது.

மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரில் உள்ள தனியார் விடுதியில், இளம் பெண்கள் இருவர் நான்கு நாட்களாக தங்கி இருந்தனர். இந்நிலையில், நேற்று காலை அறை கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த விடுதி ஊழியர்கள் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் விடுதிக்கு வந்த அண்ணாநகர் காவல்துறையினர் தல்லாகுளம் தீயணைப்புத்துறையினர் உதவியுடன், விடுதியின் கதவை உடைத்து உள்ளே சென்றனர். அப்போது, இரண்டு இளம் பெண்கள் மயங்கிய நிலையில் கிடந்தனர். அருகே விஷ பாட்டிலும் கிடந்துள்ளது. இருவரையும் மீட்டு மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். இதில் ஒருவர் கவலைக்கிடமாக உள்ளார்.

இந்நிலையில், சுயநினைவு திரும்பிய ஒரு பெண்ணிடம் காவல்துறையினர் இன்று விசாரணை மேற்கொண்டனர். அதன்படி, பள்ளி பருவத்தில் இருந்தே தோழிகளாக இருந்த இருவரும் சட்டக்கல்லுாரியில் ஒன்றாக சேர முடிவு செய்துள்ளனர். இதில் ஒருவருக்கு திருச்சி சட்டக் கல்லூரியிலும், மற்றொருவருக்கு திருநெல்வேலி சட்டக் கல்லுாரியிலும் இடம் கிடைத்துள்ளது. இருப்பினும், விடுமுறை நாட்களில் இருவரும் சந்தித்து பேசி வந்துள்ளனர். இந்நிலையில் தோழிகளில் ஒருவருக்கு பெற்றோர் வரன் பார்க்க ஆரம்பித்த நிலையில் இருவரும் தற்கொலை செய்துகொள்வதற்காக மதுரை வந்துள்ளனர்.

அதன்படி, நேற்று முன்தினம் இரவு இருவரும் விஷம் அருந்தி தற்கொலைக்கு முயற்சி செய்தனர். மேலும், 'ஆண்களை கண்டாலே எங்களுக்கு பிடிக்காது, நாங்கள் இறந்த பிறகு ஒரே குழியில் எங்களை அடக்கம் செய்யுங்கள்' என கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளனர். இச்சூழலில், இவர்கள் தன்பாலின ஈர்ப்பாளர்களாக இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

x