பாலியல் வழக்கில் கேரள முன்னாள் எம்எல்ஏ கைது!


பி.சி.ஜார்ஜ்

கேரளத்தின் முன்னாள் எம்எல்ஏ-வும், ஜனபக்சம் கட்சியின் தலைவருமான பி.சி.ஜார்ஜ் பாலியல் வழக்கில் இன்று கைது செய்யப்பட்டார்.

கேரளத்தில் ஜனபக்‌ஷம் என்ற அமைப்பை நடத்தி வருபவர் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ். சர்ச்சை மனிதரான இவர், “முஸ்லிம் கடைகளில் டீ குடிக்காதீர்கள். மாற்று மதத்தினருக்கு டீயில் ஆண்களை மலடாக்கும் மருந்தைக் கலந்து கொடுக்கிறார்கள்” என போகிற போக்கில் கொளுத்திப் போட்டார். இதற்காக கைது செய்யப்பட்ட இவர், ஜாமீனில் வெளியில் வந்தார். அதன்பின்னரும் தன் பேச்சைக் குறைத்துக் கொள்ளவில்லை. “என்னை கைதுசெய்து பயங்கரவாதிகளுக்கு பினராயி விஜயன் பரிசு கொடுத்துள்ளார்” என்று முழங்கினார்.

சர்ச்சைப் பேச்சுக்களுக்காக கைதாகி வெளியில் வந்தபின்னும் தொடர்ந்து அவதூறு பேச்சுகளை ஜார்ஜ் பேசிவந்தார். இதனால் அவரது ஜாமீனை ரத்துசெய்யக்கோரி காவல் துறை சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதை ஏற்று அவரது ஜாமீனை நீதிமன்றம் ரத்து செய்தது. ஆனால், அவதூறு பேச்சு வழக்கில் பி.சி.ஜார்ஜ் கைதாவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பாலியல் வழக்கில் இன்று கைதுசெய்யப்பட்டார்.

பூஞ்சார் தொகுதியின் முன்னாள் எம்எல்ஏ-வான பி.சி.ஜார்ஜ், கேரளத்தை உலுக்கிய சோலார் பேனல் மோசடி வழக்குடன் தொடர்புடைய பாலியல் குற்ற வழக்கில் கைது ஆகியுள்ளார். அவர்மீது, திருவனந்தபுரம் மியூசிம் போலீஸார் 354, 354 (ஏ) ஆகிய பிரிவுகளின் கீழ் பாலியல் சீண்டல் வழக்குப்பதிவு செய்துள்ளனர். தங்கக் கடத்தல் வழக்கில் ஸ்வப்னா சுரேஷை கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு எதிராக பேசத் தூண்டியதாக பி.சி.ஜார்ஜ் மீது புகார் கூறப்பட்டுவந்த நிலையில், இந்த கைது நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

x