‘குவாஹாட்டிக்கு வருமாறு எனக்கும்தான் அழைப்பு வந்தது...’ - குண்டைப் போடும் சஞ்சய் ராவத்


சிவசேனா அதிருப்தி எம்எல்ஏ-க்கள், உத்தவ் தாக்கரே அரசுக்கு எதிராக நடத்திய கலகத்தின் விளைவாக மகாராஷ்டிரத்தில் ஆட்சி மாற்றம் நிகழ்ந்திருக்கும் நிலையில், குவாஹாட்டியில் இருந்த அதிருப்தி எம்எல்ஏக்களுடன் சேருமாறு தனக்கும் அழைப்பு வந்ததாகக் கூறியிருக்கிறார் உத்தவ் தாக்கரேயின் தீவிர ஆதரவாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான சஞ்சய் ராவத்.

2019 சட்டப் பேரவைத் தேர்தலுக்குப் பின்னர், சுழற்சி முறையில் முதல்வர் பதவியைப் பகிர்ந்துகொள்வதாக உறுதியளித்த பாஜக அதை நிறைவேற்ற முன்வரவில்லை எனக் கூறீ தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறிய சிவசேனா, பின்னர் காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸுடன் ‘மகா விகாஸ் அகாடி’ கூட்டணி அமைத்து ஆட்சியமைத்தது. எனினும், இந்துத்துவக் கொள்கை கொண்ட பாஜகவை விட்டுவிட்டு, மதச்சார்பற்ற கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது தவறு எனக் கூறி ஜூன் 20 முதல், அமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா எம்எல்ஏ-க்கள், முதல்வர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகப் போர்க் கொடி தூக்கினர். முதலில் சொகுசுப் பேருந்தில் குஜராத்தின் சூரத் நகர் சென்ற அவர்கள், பின்னர் அங்கிருந்து அசாமின் குவாஹாட்டிக்குச் சென்று நட்சத்திர ஹோட்டலில் முகாமிட்டனர்.

இந்த அதிருப்தியின் பின்னணியில் பாஜக இருப்பதாக உத்தவ் தாக்கரே தரப்பு முன்வைத்த குற்றச்சாட்டுகளை அக்கட்சியினர் மறுத்தனர். எனினும், ஒருகட்டத்தில் முன்னாள் முதல்வர் தேவேந்திர ஃபட்னவீஸ் மகாராஷ்டிர ஆளுநர் பகத் சிங் கோஷியாரியைச் சந்தித்து, நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக் கோரினார். அதை ஏற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு ஆளுநர் உத்தரவிட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றம் சென்ற உத்தவ் தாக்கரே தரப்பு,

யாரும் எதிர்பாராத வகையில் ஏக்நாத் ஷிண்டேயை முதல்வராகவும், தேவேந்திர ஃபட்னவீஸைத் துணை முதல்வராகவும் அறிவித்து ஆச்சரியப்படுத்தியது பாஜக. இருவரும் பதவியேற்றுவிட்ட நிலையில், வரும் திங்கள்கிழமை (ஜூலை 4) பெரும்பான்மையை நிரூபிக்க புதிய அரசுக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. ஆட்சியை இழந்ததுடன் கட்சியையும் இழக்கும் அபாயத்தில் இருக்கும் உத்தவ் தாக்கரே தரப்பு, ஏக்நாத் ஷிண்டே தரப்பைத் தொடர்ந்து விமர்சித்துவருகிறது.

இது தொடர்பாக இன்று மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய சஞ்சய் ராவத், “தேவேந்திர ஃபட்னவீஸுக்கு முதல்வர் பதவியை அக்கட்சியின் மத்திய தலைமை வழங்கவில்லை. துணை முதல்வர் எனும் வார்த்தை அவருக்குப் பொருந்துவதாக எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதெல்லாம் அவர்களது உட்கட்சி விவகாரம். நான் அதைப் பற்றியெல்லாம் பேச மாட்டேன்” என்றார்.

“மும்பையிலும் மகாராஷ்டிரம் முழுவதும் சிவசேனாவை அழிக்க பாஜக முயல்கிறது. ஆனால், அது நடக்கவில்லை” என்று கூறிய சஞ்சய் ராவத், “குவாஹாட்டியில் அதிருப்தியாளர்கள் இருந்தபோது அவர்களுடன் இணைந்துகொள்ள எனக்கும் அழைப்பு வந்தது. ஆனால், பால் தாக்கரேயைப் பின்பற்றுபவன் என்பதால் நான் அங்கு செல்லவில்லை. உண்மை நம் பக்கம் இருக்கும்போது நாம் ஏன் பயப்பட வேண்டும்?” என்று கூறினார்.

மகாராஷ்டிர அரசியல் குழப்பங்கள் உச்சத்தில் இருந்த நிலையில், 1,034 கோடி ரூபாய் முறைகேடு நடந்ததாகத் தொடரப்பட்டிருக்கும் பத்ரா சால் நிலமோசடி வழக்கில் நேரில் ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு ந்சம்மன் அனுப்பியது அமலாக்கத் துறை. ஏப்ரல் மாதம் இந்த வழக்கு தொடர்பாக அவரது சொத்துக்களை அமலாக்கத் துறை முடக்கியது.

முன்னதாக, மகாராஷ்டிர அரசைக் கவிழ்க்குமாறு அமலாக்கத் துறை தனக்கும் தன் குடும்பத்துக்கும் அழுத்தம் தருவதாக, 2022 பிப்ரவரியிலேயே சஞ்சய் ராவத் பரபரப்பு குற்றச்சாட்டைக் கிளப்பினார். இதுதொடர்பாக மாநிலங்களவைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவுக்கும் அவர் கடிதம் எழுதினார். விசாரணை அமைப்புகள் தற்போது அரசியல் எஜமானர்களின் கைப்பொம்மைகளாக மாறிவிட்டன என்று அந்தக் கடிதத்தில் கூறியிருந்த அவர், “என்னை வழிக்குக் கொண்டுவருமாறு தங்கள் தலைவர்களால் தங்களுக்கு அழுத்தம் தரப்படுவதாக அதிகாரிகளே என்னிடம் கூறியிருக்கிறார்கள்” என்றும் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

x