பைக், ஜீப் வரிசையில் தற்போது மின்கம்பம்... அடுத்தடுத்து சர்ச்சைக்குள்ளாகும் சாலைப் பணிகள்: தமிழக அரசை விமர்சிக்கும் நெட்டிசன்கள்!


வேலூரில் ஸ்மார்ட் சிட்டி பணியின் போது டூ வீலரோடு சேர்த்து அமைக்கப்பட்ட சிமெண்ட் சாலை படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிய நிலையில், அடுத்த இரண்டு தினங்களிலேயே ஜீப்போடு சேர்த்து சாலை போட்டுள்ள சம்பவம் சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில் ஆம்பூர் நகராட்சியில் மின்கம்பத்தை அப்புறப்படுத்தாமல் கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்டுள்ள படங்கள் வைரலாகி வருகின்றன.

வேலூர் மாநகராட்சி பகுதிகளில் ஸ்மார்ட் சிட்டி பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த நிலையில் வேலூர் மெயின் ரோடு காளிகாம்பாள் தெரு பகுதியில் சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டது. அப்போது காளிகாம்பாள் தெருவைச் சேர்ந்த சிவா என்பவர் தனது இருசக்கர வாகனத்தை வழக்கம் போலக் கடை முன்பாக நிறுத்திவிட்டுச் சென்றுள்ளார். காலையில் அவர் வழக்கம் போலக் கடைக்கு வரும்போது, நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இருசக்கர வானத்தை அப்புறப்படுத்தாமல் அதனுடன் சேர்ந்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். சிமெண்ட் கலவையில் வாகனம் சிக்கியதால் சாலையை உடைத்து விட்டு வாகனத்தை வெளியில் எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இருசக்கர வாகனத்துடன் சேர்த்து சிமெண்ட் சாலை அமைக்கப்பட்ட படங்கள் சமூகவலை தளங்களில் வைரலாகி பெரும் விவாதத்திற்கு ஆளானது.

அடுத்த இரண்டு நாட்களிலேயே வேலூர் சாயிநாதபுரம் பொன்னியம்மன் கோயில் தெருவில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த ஓடாத பழைய ஜீப்பை அப்புறப்படுத்தாமல் அதைச் சுற்றி தார்சாலை அமைக்கப்பட்டது. அப்பகுதி மக்கள் அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி ஆணையர் அசோக்குமார் நேரில் வந்து கிரேன் மூலம் ஜீப்பை பெயர்த்தெடுத்து அப்புறப்படுத்தினார். அந்த படங்களும் சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. மேலும் அதே பகுதியில் வீடு கட்டுவதற்காக இரும்பு கம்பிகளைச் சாலையோரம் போட்டு வைத்திருந்தார்கள். அதையும் அப்புறப்படுத்தாமல் இரும்பு கம்பி மீது தார் சாலை அமைத்துள்ளார்கள். இருசக்கர வாகனத்தை அகற்றாமல் சிமெண்ட் சாலை போட்ட விவகாரத்தில் காண்ட்ராக்டரின் ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், உதவிப் பொறியாளர் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் என வேலூர் மேயர் சுஜாதா தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் நகராட்சியில் மின் கம்பத்தை அகற்றாமல் அதன் மீதே கழிவுநீர் கால்வாய் அமைத்த விவகாரம் சர்ச்சைக்குள்ளாகி இருக்கிறது. இதுபோன்ற சர்ச்சைக்குரிய சம்பவங்கள் தொடர்வதால் தமிழக அரசை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சிக்கத் தொடங்கி இருக்கிறார்கள்.

x