பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 682 இந்தியர்கள்: விடுதலை எப்போது?


49 பொதுமக்கள் மற்றும் 633 மீனவர்கள் உட்பட பாகிஸ்தான் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 682 இந்தியர்களின் பட்டியலை இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்துடன் பாகிஸ்தான் அரசு பகிர்ந்துள்ளது.

இதேபோல், இந்திய சிறைகளில் அடைக்கப்பட்டுள்ள 345 பொதுமக்கள் மற்றும் 116 மீனவர்கள் உட்பட 461 பாகிஸ்தான் மக்களின் பட்டியலை புதுதில்லியில் உள்ள பாகிஸ்தான் தூதரகத்தில் இந்தியத் தரப்பு பகிர்ந்துள்ளது.

தூதரக அணுகுமுறை தொடர்பான 2008-ம் ஆண்டின் ஒப்பந்த விதிகளின்படி இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாட்டின் சிறைகளில் உள்ள பொதுமக்கள் மற்றும் மீனவர்களின் பட்டியலை இரு நாடுகளும் பரஸ்பரம் பகிர்ந்துக்கொண்டனர். இந்தப் பட்டியல்கள் ஆண்டுக்கு இருமுறை ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய சூழலில் தண்டனையை நிறைவு செய்த 536 இந்திய மீனவர்கள் மற்றும் 3 சிவில் கைதிகளை உடனடியாக விடுவித்து திருப்பி அனுப்புமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா வெள்ளிக்கிழமை கோரிக்கை வைத்துள்ளது. மேலும், பாகிஸ்தானின் காவலில் உள்ள இந்தியர்கள் என நம்பப்படும் 105 மீனவர்கள் மற்றும் 20 சிவில் கைதிகளுக்கு உடனடி தூதரக அணுகலை வழங்குமாறும் பாகிஸ்தானிடம் மத்திய வெளியுறவு அமைச்சகம் கேட்டுக் கொண்டுள்ளது. இந்தியாவின் வேண்டுகோளை ஏற்று பாகிஸ்தான் சிறைகளில் உள்ள இந்தியர்கள் விடுதலை செய்யப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

x