சிவகங்கை மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி கணக்கு உருவாக்கி அவரின் நேர்முக உதவியாளரிடம் ரூ. 3 லட்சம் வரை மோசடி செய்யப்பட்ட நிலையில், சைபர் க்ரைம் காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவகங்கை மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் விவசாயத்துறை நேர்முக உதவியாளராக பணிபுரிந்து வருபவர் சர்மிளா. இவரது வாட்ஸ்அப் எண்ணிற்கு ஆட்சியர் மதுசூதன் ரெட்டியின் புகைப்படத்துடன் கூடிய போலி கணக்கில் இருந்து குறுஞ்செய்தி வந்துள்ளது. அதில், இணையதள லிங்க் மூலம் ரூ.10 ஆயிரம் அனுப்பக் கோரி இருந்தது. இதனை உண்மை என நம்பிய சர்மிளா 10 ஆயிரம் ரூபாயை அந்த லிங்க் மூலம் அனுப்பியுள்ளார். இதேபோல், அடிக்கடி குறுஞ்செய்தி வரவே இவரும் 30 முறை 10 ஆயிரம் அனுப்பியுள்ளார். மொத்தமாக ரூ.3 லட்சம் வரை அனுப்பியுள்ளார்.
இந்நிலையில், சந்தேகம் அடைந்த அவர் இது குறித்து ஆட்சியர் அலுவலகத்தில் விசாரித்ததில், அது போலி கணக்கு என்பது தெரிய வந்துள்ளது. உடனடியாக சிவகங்கை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் செயல்பட்டு வரும் சைபர் க்ரைம் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார். உடனடியாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் விசாரனையை தொடங்கி உள்ளனர். முதற்கட்ட விசாரணையில், அந்த போலி செல்போன் கணக்கு பிஹார் மாநிலத்தில் இருந்து செயல்பட்டு வருவது தெரிய வந்துள்ளது.
ஆட்சியரின் நேர்முக உதவியாளரிடமே, மாவட்ட ஆட்சியரின் பெயரில் போலி செல்போன் கணக்கு மூலம் பணம் மோசடி செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.